இஸ்லாம் அடிப்படைவாதம் நாட்டில் உருவெடுத்து வருகிறது : போராட்டம் தொடரும் - ஞானசார தேரர்

Published By: Priyatharshan

24 Jun, 2017 | 01:13 PM
image

இலங்கையை போன்று முஸ்லிம்களின் உயிருக்கு பாதுகாப்பான நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. ஆனால் விடுதலைப் புலிகளை விட 100 மடங்கு முன்னோக்கிய ஆபத்தான ஒன்றாகவே இஸ்லாம் அடிப்படைவாதம் நாட்டில் உருவெடுத்து வருகின்றது. ஆகவே அனைத்து இன மக்களினதும் நாட்டினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுபல சேனா தொடர்ந்தும் போராடும். புத்தரின் தர்ம போதனையின் அடிப்படையில் வாழும் என்னை திருட்டில் ஈடுபடும் அடிப்படைவாதிகள் பயங்கரவாதி என விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மைகள் வெளிவரும் போது நான் உயிருடன் இல்லா விட்டாலும் மக்கள் எனக்கு சிலை வைப்பார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விஷேட செவ்வி தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  வழங்கிய செவ்வி வருமாறு, 

கேள்வி :முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறி பல தரப்புகளும் கடுமையாக உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன ?

பதில் : தவறான நிலைப்பாடாகும்.  எமக்கு தமிழ் , சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறுப்பாடு இல்லை. நாட்டில் இனவாதத்திற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் அளிக்க முடியாது என்பதே எமது நோக்கமாகும். திருட்டை பிடித்துக் கொடுப்பவரை தாக்குகின்றனர். ஆனால் திருடனை யாரும் கண்டு கொள்வதில்லை. திருடனை பிடித்துக்கொடுப்பவரை தாக்குவதும் விமர்சிப்பதுமான செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. 

நாட்டில் கலாசாரத்தை சிதைக்கும் குழுக்கள் செயற்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் சென்று பாருங்கள் . அங்கு வாழும் தமிழ் மக்களிடம் கேட்டால் உண்மைகளை அறிந்துக்கொள்ள முடியும். தென் பகுதியிலும் சில பகுதிகளுக்கு சென்று பார்த்தால் உண்மை நிலை வெளிப்படும். 

நாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 30 ஆண்டு காலம் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டோம். அவ்வாறானதொரு நிலைமை இன்றோ நாளையோ அல்லது இன்னும் ஐந்து வருடத்திலோ ஏற்படலாம். அதனை தடுக்கும் நோக்கிலேயே பொதுபலசேனா செயற்பட்டுகிறது. 

கேள்வி : இஸ்லாம் மீது குற்றம்சாட்டுகின்றீர்கள் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் என்கின்றீர்கள்? எவ்வாறு இப்படிக் கூறுகின்றீர்கள்?

பதில் : இந்த விடயத்தை பொதுபல சேனா பேசுவதை விட தற்போது அனுபவம் மிக்க உயரிய மாநாயக்க சங்கத்தினர் கையில் எடுத்துள்ளனர். இந்த விடயத்தை அவர்களிடம் ஒப்படைப்பதே எமக்குள்ள சிறந்த வழியாகும். ஆனால் பிரச்சினை அதுவல்ல. இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு பௌத்த மதம் தொடர்பில் கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால் பௌத்தர்களுக்கு இஸ்லாம் மதம் குறித்து எவ்விதமான கருத்தும் தெரிவிக்க முடியாது. இந்நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை எவ்வாறு கணிப்பது.

இஸ்லாம் மதக் கட்டளைகளை  செயற்படுத்துபவர்களே முஸ்லிம்கள். அவர்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றனர். மறுபுறம் பௌத்த மரபுகளை சிதைக்கின்றனர். இதனைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். சாதாரண முஸ்லிம் மக்களை நாங்கள் எதிர்க்கவில்லை. கலாசார ரீதியாகவும் சட்டம் , எமது உணவு முறைமை உள்ளிட்ட அனைத்தையும் ஆக்கிரமிக்கின்றனர். பிரிவினைவாத்துடன் வரும் இவ்வாறான அடிப்படைவாதத்தையே நாம் எதிர்க்கின்றோம். இதனைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே பிரச்சினை உள்ளது. 

கேள்வி :இஸ்லாம் மதத்தை எதிர்ப்பதும் - இந்து மதம் மீதான பொதுபலசேனவின் ஆதரவுப் போக்கையும் எவ்வாறு நியாப்படுத்த முடியும் ?

பதில் : மத பிரச்சினைகளை ஒரு புறம் வைப்போம். எமக்கு வேறுபாடுகள் இல்லை. உங்களது கையை வெட்டினாலும் எனது கையை வெட்டினாலும் வெளிவரப்போவது என்னவோ சிவப்பு உதிரம் தான். எனவே இங்கு மனிதாபிமானம் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. இதனை சிதைக்கும் வகையில் செயற்படும் இஸ்லாம் அடிப்படைவாதத்தினையே எதிர்க்கின்றோம். நல்லவர்களும் கெட்டவர்களும் அனைத்து சமூகத்திலும் உள்ளனர். இது சமூதாயத்தின் நியதியாகும். 

ஆனால் எமக்குள்ள பிரச்சினை என்பது சாதாரண மக்களை நோக்கியதல்ல. நாட்டின் சட்டத்தை சிதைத்து செயற்படுபவர்கள் தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் உள்ளது. அவ்வாறான குழுக்களை அடையாளம் கண்டு எதிர்ப்பதே எமது செயற்படாகவும் காணப்படுகின்றது. அனைவரும் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும். 

உதாரணமாக வனவள சட்டம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரு விதமாக செயற்படுகின்றது. ஆனால் முஸ்லிம்களுக்கு அந்த சட்டம் வேறு விதமாக செயற்படுகின்றது. பல முஸ்லிம் தரப்புகள் வனவள சட்டத்தையும் தொல்பொருள் சட்டத்தையும் மீறுகின்றனர். இவ்வாறான விடயங்களில் சட்டத்தை வலுப்படுத்தி அனைத்து சமூகத்திற்கும் நீதி கிடைக்கும் வகையில் செயற்பட வேண்டியதே அவசியமாகும். எனவே இங்கு இஸ்லாம் - இந்து என்பதை விட சட்டமே முதன்மையாக வேண்டும். 

அடிப்படைவாதிகள் அனைத்து பிரிவுகளிலும் உள்ளனர். ஆனால் பொதுபலசேனவை எவ்வாறு அடிப்படைவாதிகள் என கூறுகின்றனர் என்பது புரிய வில்லை. நான் இனவாதியும் அல்ல மதவாதியும் அல்ல . சாதாரண மனிதன். புத்தரின் தர்ம போதனையின் அடிப்படையில் வாழும் ஒருவரே நான். ஆனால் திருட்டில் ஈடுபடுபவர்கள் பொதுபல சேனாவை  மதவாதிகள், அடிப்படைவாதிகள் என விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது. தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அதனை எதிர் கொள்ள வேண்டிய நிலையே எமக்குள்ளது. 

கேள்வி :போர் காலத்தில் இவ்வாறான அடிப்படைவாத்திற்கு எதிரான செயற்பாடுகளில் நீங்கள் ஈடுபட வில்லை. ஆனால் தற்போதைய அமைதியான சூழலில்  ஏன் இவ்வாறு கடுமையாக செயற்பாட வேண்டும் ?

பதில் : போர் இடம்பெற்ற காலப்பகுதியில் என்னைப்போல செயற்பட்ட ஒரு பிக்கு நாட்டில் இல்லை என்றே நான் கருதுகின்றேன். அக்காலப்பகுதியில் 2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஆயுத ரீதியில் முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போது , குமார் ரூபசிங்கவின் சமாதானப் பேரவை போன்ற அமைப்புகள் அதற்கு எதிராக செயற்பட்டன. தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிறால் லக்திலக போன்றவர்களும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டனர். 

அந்த காலப்பகுதியில் சமாதான பேரவையை தோல்வியடையச் செய்ததும் நான் தான். போர் நிறுத்த காலப்பகுதியிலும் கிழக்கிற்கு சென்று போராட்டங்களை நடத்தினோம். அந்த போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவை அல்ல. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டங்களையே நாங்கள் முன்னெடுத்தோம். 

1998 ஆம் ஆண்டில் இருந்து எமது போராட்டம் ஆரம்பித்தது. 2009 ஆம் ஆண்டு போராட்டத்திற்கான வெற்றி எமக்கு கிடைத்தது. அன்று நாட்டிற்கு தேவைப்பட்ட ஆன்மீக தலைமைத்துவத்தை வழங்கினோம். இன்றுள்ள சவால்களையும் அதே நிலைப்பாட்டில் இருந்து வெற்றிகொள்வோம். 

கேள்வி :இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு தீ வைப்பதாகவும் உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களும் உங்களை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பதில் : எந்தவொரு சந்தர்ப்பத்தில் உணர்வுகளுக்கு அடிமைப்படாது புத்திசாலித்தனமாக சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் யாரும் பேசுவதில்லை. சோமாவதி பகுதியில் உள்ள வெஹேரகொடவில் பெரும் தொகையான தூபிகள் காணப்படுகின்றன. இங்கு 15 தூபிகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மாட்டு கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அடையாளங்களை அழிக்க இடமளிக்க முடியாது. அதே போன்று மாணிக்கமடுவிற்கு சென்று பார்த்தாலும் அதே சிதைவு நிலைதான் காணப்படுகின்றது. பாழி மொழியில் மாணிக்க என்பது மாணிக்கல்லை குறிக்கும் சொல்லாகும். தீபவாவியில் வைப்பதற்காக மறைத்து கொண்டு வரப்பட்ட மாணிக்கம் நிறைந்த பொதியை வைத்திருந்த இடமே கிழக்கின் மாணிக்கமடு  சத்தாதிஸ்ஸ மன்னரின் கோட்டையாகும். 

இதனை இன்று முஸ்லிம்கள் மாயாமடு என கூறுகின்றனர். இதனை சிதைவு எனக் கூறாது வேறு எவ்வாறு கூற முடிகின்றது. மற்றுமொரு விடயம் சிவனொலிபாத மலையாகும். 1988 ஆம் ஆண்டு பேராசிரியர் விமலசூரிய முஸ்லிம் சிறார்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் தவறான வரலாறு தொடர்பான நூல் ஒன்றினை எழுதியிருந்தார். 

அதாவது 600 வருடங்களுக்கு முன்னர் இப்னு  பதுதா என்பவரே சிவனொலிபாத மலையை கண்டுபிடித்ததாக கற்றுக்கொடுக்கின்றனர். இதனூடாக சிவனொலிபாத மலை முஸ்லிம்களின் உரிமம் என்பதையே கூற வருகின்றனர். இந்நிலையில் வரலாற்றை தவறாக கற்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் போராட்டத்திற்கு வர மாட்டார்களா ? இவற்றையே பொதுபலசேனா சுட்டிக்காட்டுகின்றது. இதனால் இன்று நாங்கள் பயங்கரவாதிகளாக, மதவாதியாக விமர்சிக்கப்படுகின்றோம். 

தர்மபால மாவத்தையை ஹசன் மாவத்தை என பெயர் மாற்றும் போது மௌனித்திருந்தால் நல்லிணக்கம் . ஏலபொல குமாரிஹாமி வீதி பள்ளி வீதியாகும் போது மௌனித்திருந்தால் சிறந்த பிக்குகள் நாங்கள். அதனை சுட்டிக்காட்டினால் பயங்கரவாதி என்கின்றனர். அதே போன்று வில்பத்து காடழிப்பு தொடர்பாக பேசுவதற்கு முன்னர் , வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தை வெட்டுவதாயின் எத்தனை அனுமதிகளைப் பெற வேண்டியதுள்ளது.

அந்த சட்டம் ஏன் வில்பத்துக்கு செல்லுபடியாகாது என்பதை பேச வேண்டும். ரிஷாட் பதியூதீனின் பிரச்சினையை பிறகு பார்க்கலாம். தமிழ் மற்றும் சிங்களவர்கள் காட்டில் விறகு வெட்டினால் சட்டத்தை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.  ஏன் அந்த சட்டம்  ரிஷாட் பதியூதீனிக்கு இல்லை. எனவே இது வேறு மட்டத்தில் பேசப்பட வேண்டிய பிரச்சினையாகும். அதற்கான புறச்சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன். 

கேள்வி :நல்லிணக்கம் தொடர்பில் பேசும் போது அண்மையில் மனோ கணேஷனின் அமைச்சுக்கு சென்று அந்த அமைச்சுக்கு அவர் தகுதியில்லை எனக் கூறியிருந்தீர்கள் .

பதில் : இல்லை , மனோ கணேஷன் சிறந்த மனிதர் . அவர் தொடர்பாக எனக்கு தவாறான நிலைப்பாடே காணப்பட்டது. நல்லிணக்க அமைச்சின் பொறுப்புக்களை அவரால் முன்னெடுக்க முடியும் என நான் நம்புகின்றேன். ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் தூதரகங்களின்  நிகழ்ச்சி நிரல்கள் அல்ல . மனோ கணேஷனுக்கு தேசிய திட்டம் ஒன்று இருக்க வேண்டும். மனசாட்சிக்கு நேர்மையாக செயற்பட வேண்டும். 

மிக விரைவில் மீண்டும் மனோ கணேஷனை சந்திக்க உள்ளேன். ஊடகங்களில்லாத சூழலில் அவரை சந்திக்க விரும்புகின்றேன். அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எமக்கில்லை. சந்திப்பு 5 நிமிடத்திற்கு முன்னர் இரத்து செய்யப்பட்டமையினாலேயே அமைச்சில் சற்று குழப்பமான சூழல் ஏற்பட்டது. எனவே அவருக்கு தேவையான ஒத்துழைப்புகளை எதிர்காலத்தில் வழங்குவோம். 

கேள்வி : உயிரச்சுறுத்தல் உள்ளதாக கூறியிருந்தீர்கள். ஐ எஸ் அமைப்பின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளீர்கள் . இதன் உண்மைத் தன்மை என்ன ?

பதில் : எனக்கு உயிரச்சுறுத்தல் உள்ளது. அது குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எமக்கு மரணம் எவ்வாறு வரும் என்ற தெரியாது. ஆனால் வெறுமனே மரணிக்க நான் விரும்ப வில்லை . பிரச்சினைகளுக்காக முன்னின்று இனத்திற்காக போராடி 100 நாட்கள் உயிர் வாழ்ந்தாலும் போதும் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலைப்பாட்டில் இருந்து  கொண்டு தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றேன். 

அனைத்து தரப்புகளிலும் எமக்கு எதிரிகள் உள்ளனர். சிலர் போராட்டத்தை தவறான பார்வையில் காணுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சி , சுதந்திர கட்சி , மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவர்கள் அனைவரும் தமது கட்சி நிறங்களின் கண்ணாடி ஊடக பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் கட்சி கண்ணாடிகளை அகற்றி விட்டு பார்த்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும். 

பயணத்தை ஆரம்பித்து தொடரும் போது அட்டைகள் காலில் தொற்றுவது இயற்கையானது . ஆனால் எமது இலக்கு புனிதமானது என்றால் அது வெற்றி இலக்கை அடையும் . இலங்கை பௌத்த நாடு என்ற வகையில் அந்த ஆசிர்வாம் எமக்குள்ளது. சத்திய தர்மத்தின் வழியிலேயே நாங்கள் பயணிக்கின்றோம். எனவே இன்று திரைக்கு பின்னால் இருந்துக் கொண்டு ஆட்டம் போடும் குழுக்கள் வெளிவரும் நாட்கள் வரும் . அந்த காலம் வருகையில் நாங்கள் சில சந்தர்ப்பங்களில் மரணித்திருப்போம். ஆனால் மக்கள் எமக்கு சிலை செய்வார்கள். எமது எச்சரிக்கையை பொருட்படுத்தாமையின் விளைவே இது என்று ஒருநாள் உணர்வார்கள். 

1983 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதம் தூக்குவதற்கு முன்னர் செல்வநாயகம் போன்றவர்கள் 1930 களில் அதற்கான அடித்தளத்தை போட்டனர். எனவே இன்று முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பில் குரல் எழுப்புகின்றோம். விடுதலைப் புலிகளை விட 100 மடங்கு முன்னோக்கிய ஒன்றாகவே அமையும். நல்லிணக்கத்தை விரும்பும் சிங்களம் , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு  முஸ்லிம் அடிப்படைவாதம் பெரும் பிரச்சினையாக அமையும். 

எனவே அவரசமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றதைப் போன்று இந்த பிரச்சினைக்கும் அவரமாக தீர்வு காணப்பட வேண்டும். பிளவுப்பட கூடிய அனைத்து விடயங்களும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. முகத்தை மறைத்தல் , தாடி வளர்த்தல் , உணவு முறைமை ஹலால் மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

நாட்டிற்கு அழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அறிவுசார்ந்த முஸ்லிம் சமூகம் இந்த பிரச்சினையை பேசுவதற்கு முன்வர வேண்டும். அப்போது தான் தீர்வை எட்ட முடியும். இலங்கையை போன்று நல்லிணக்கம் மிக்க , உயிரச்சுறுத்தல் அற்ற நாடு முஸ்லிம்களுக்கு உலகில் வேறு எங்குமே இல்லை. இலங்கையைப் போன்று பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உள்ளதா ? உயிர் பயம் இன்றி முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கின்றனர். பௌத்தர்களின் நல்லிணக்கத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கேள்வி : இலங்கையில் ஐஸ். எஸ். ஐஸ். எஸ்.  செயற்பாடுகள் காணப்படுகின்றதா ?

பதில் : இதற்கான ஆதாரங்களை பொதுபலசேனா பொறுப்புடைய தரப்புகளுக்கு வழங்க உள்ளது. நாங்கள் பேசினால் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. எனவே பொறுப்புடைய பௌத்த தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களிடம் ஆதாரங்களை வழங்க உள்ளோம். அதன் பின்னர் பிரச்சினைக்கு தீர்வை உடனடியாக ஏற்படுத்துமாறு வலியுறுத்த உள்ளோம். 

கேள்வி : பொதுபலசேனாவின் பின்னணியில் வலுவான நாடு ஒன்றுள்ளதாகக் கூறப்படுகின்றது . இதன் உண்மைத் தன்மை என்ன ? 

பதில் : இதற்கு சுருக்கமான பதில் என்றால் , வேறு நாடொன்றின் பின்னணி எனக்கிருந்தால் இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுகின்றனர். எமது நாட்டின் அரசியல்வாதிகள் சாத்திரம் பார்ப்பது போன்று கருத்துக்களை கூறுகின்றனர். கோத்தாபாய , மஹிந்த போன்றவர்கள் பொதுபலசேனாவின் பின்னணியில் உள்ளதாக கூறுகின்றனர். அல்ஹாஹ் மாத்திரமே என் பின்னால் உள்ளாரென இதுவரையில் கூறவில்லை. எனவே இவை அனைத்துமே உண்மையற்ற வெறும் வார்த்தைகள் மாத்திரமேயாகும். 

கேள்வி : முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு தயாரில்லையா ?

பதில் : கடந்த அரசாங்கத்துடனும் பேசினோம். மக்கள் கருத்துக்களுக்கு செவிமெடுக்காத சர்வாதிகார ஆட்சியாகவே கடந்த ஆட்சி கருதப்பட்டது. எனவே தான் நாட்டின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல நியாயமாக செயற்படும் என்று எதிர்பார்த்த போதிலும் நாட்டு மக்களுக்கு தற்போது உண்மை நிலை வெளிப்பட்டுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பிரச்சினையை நல்லாட்சி அரசாங்கம் பொதுபலசேனாவை விட சிறந்த வகையில் நோக்கும் என்றே கருதினோம். 

ஆனால் மஹிந்த ஆட்சியைப் போன்று இவர்களும் எம்மை குறை கூறுகின்றனர். எனவே பிரச்சினையை தீர்க்க வேண்டிய தேவை இவர்களுக்கும் இல்லை என்றே தெரிகின்றது. ஆனால் ஜனாதிபதி தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். அவருக்கு போதுமான ஒத்துழைப்புகள் இல்லை. 

கேள்வி : முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக எதிர்காலத்திலும் செயற்படுவீர்களா ?

பதில் : நிச்சயமாக. அடிப்படைவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராக போராடுவோம். அது மாத்திரம் அல்ல இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கு எதிராகவும் போராடுவோம். உண்மைகளை மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர். தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்களம் எந்த போர்வையில் வந்தாலும்  அடிப்படைவாதத்திற்கு எதிரான பொதுபல சேனாவின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 

(லியோ நிரோஷ தர்ஷன் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22