அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு நீர் தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் மீது சற்று முன்னர் இந்த நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தடி அடியில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார்,

போக்குவரத்தினை சீர்செய்வதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு அத்துமீறி நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.