வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று மாலை 5 மணியளவில் மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு, ஈஸ்வரிபுரத்தில் வசித்து வரும் 26 வயதுடைய பெண்ணொருவர் நேற்று மாலை 5 மணியளவில் அவரின் வீட்டிலிலுள்ள மலசலகூடத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இதையடுத்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து குறித்த சிசுவை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இறந்த சிசுவின் சடலம் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயார் அதிக குருதி வெளியேற்றம் காரணமாக வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தை பிரசவிக்கும் சமயத்தில் குழந்தை மலசல கூடத்தில் வீழ்ந்து இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் வவுனியா குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.