வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் தந்தையர் தினம் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை பிரம்ம குமாரிகள் சங்கம் வருகை தந்து பஜனை மற்றும் கருத்துரைகளில் ஈடுபட்டனர். தமிழ் விருட்சம் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மதியபோசன உணவுக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

நேற்று திங்கட்கிழமை மாவட்ட சமூக சேவை அலுவலகம் தந்தையர் தினத்தை 'மகிழ்வோர் மன்றம்' என்ற தலைப்பில் நிகழ்வுகளை நடாத்தி சிறப்பித்தனர்.லண்டன் வீ - 3 அமைப்பினூடாக கோண்டாவிலைச் சேர்ந்த அமரர் மஹாலட்சுமி செல்வரட்ணம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் வசிக்கும்  அவரது மகன் செ.ஜெகத் ஜெனன் இதற்கான ஏற்பாட்டைச்செய்திருந்தார் 

இன்றைய நிகழ்வுகளில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் இல்ல பொறுப்பாளர் செல்வி அகிலா, செல்வி  தேவிகா செல்வி மதுசினி  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் . 

முதியோர்களின் ஆடல் பாடல் மற்றும் கருத்தாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. 2009 இல் இடம்பெயர்ந்த மக்களின் துயர் துடைக்கவென பலரது வேண்டுதலின் பேரில் சமனங்குளம் வித்தியாலயத்தில் இருந்த முதியோர்களை பொறுப்பேற்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வில்லம் யுத்தத்தின் பின் அளப்பரிய சேவையை எமது சமூகத்திற்கு ஆற்றியுள்ளது. 

இன்றுவரை  கோவில்குளம் சிவன் ஆலய தர்மகர்த்தா சபையினரால் குறிப்பாக  இதன் செயலாளர் திரு நவரத்தினராசா மற்றும் இங்குள்ள ஊழியர்களால்    மிகவும் சிறப்பான முறையில் இவ்வில்லம்  நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.