சம்பந்தன் எழுதிய கடிதத்துக்கு விக்கி பதில்

Published By: Robert

18 Jun, 2017 | 10:47 AM
image

வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாணும் வகையில் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எழு திய கடிதத்துக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அவர் நேற்று இரவு அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் வடமாகாணசபையில் இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களை அடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டாய விடுமுறை அளிக்கப்பட்ட 

அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனிஸ்வரன் ஆகியோர் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உத்தரவாதமளித்தால் எனது நிபந்தனையை மீள்பரிசீலனை செய்வதற்கு தயாராக உள்ளேன் என  திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களான சுரேஷ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன் ஆகியோர் முதல்வருடன் நேற்று சனிக்கிழமை மாலை முக்கிய சந்திப்பை நடத்தியிருந்தார்.

இதனையடுத்தே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறான அறிவிப்பை கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் 14ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணசபையின் விசேட அமர்வில்  இருவேறு தீர்மானங்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அங்கு நெருக்கடி நிலைமைகள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் இருதரப்பிற்கும் இடையில் மத்தியஸ்த முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன்  ஆகியோரும் இப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், குறித்த இரு அமைச்சர்களும் விசாரணைகளில் தலையீடு செய்யமாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கும் வகையிலான எழுத்துமூல கடிதமொன்றை கையளிக்கும் பட்சத்திலேயே தனது அறிவிப்பை மாற்றுவது குறித்து சிந்திப்பேன் என உறுதியாக தெரிவித்திருந்தார். 

எனினும் குறித்த இரண்டு அமைச்சர்களும் அவ்வாறான உத்தரவாத கடிதத்தை வழங்குவதற்கு தயாராக இல்லாதிருந்ததுடன் அமைச்சர்களுக்கு கட்டாய விடுப்பு அளிப்பதானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் கூறி அதனை நிராகரித்தனர். இதனால் இருதரப்பினரிடையிலும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது. 

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் காலை எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண சபையின் அமைச்சர்கள் இருவர் மீது விசாரணைக்குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக முதலமைச்சரால் எடுக்கப்பட்ட முடிவு பொருத்தமற்றது. ஆகையினால் அதனை மீள திருத்துமாறு வலியுறுத்தி கடிதமொன்றை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனையடுத்து நேற்று மாலையளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவரும், குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்தின் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் சர்வேஸ்வரன் ஆகியோர் நேற்று மாலை 5.30மணியளவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவருடைய உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைமைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்தனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குறித்து மிகவும் கரிசனை காட்டப்பட்டது. 

இதனையடுத்து, பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஏகோபித்த கருத்தொன்றை முன்வைத்தனர். அதாவது, கட்டாய விடுப்பு வழங்கப்பட்ட இரு அமைச்சர்கள் உத்தரவாத கடிதம் வழங்குவதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அவர்கள் குறித்த உத்தரவாத்தை அளிக்கும் பட்சத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தாங்கள் அதனை வழிமொழிவதோடு, அதற்குத் துணையான உறுதிப்பாட்டை வழங்குவதாகவும், எனவே தாங்கள் உத்தரவாதக் கடிதம் என்ற விடயத்தை மீளப்பரிசீலிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதனையடுத்து முதலமைச்சர் ``நான்கு கட்சிகளும் கூட்டாகவே என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏகோபித்த தீர்மானத்தினை எடுத்து நிறுத்தியிருந்தன. தற்போது அந்த இரு அமைச்சர்கள் விடயத்தில் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் உட்பட நான்கு கட்சிகளும் உத்தரவாதமளித்தால் அதனை மீள்பரிசீலிக்கின்றேன்" என்று குறிப்பிட்டதுடன், அந்த விடயத்தை மையப்படுத்தியும் நேற்றுக்காலை தனக்கு கிடைக்கப்பெற்ற அவரின்(சம்பந்தனின்) கடிதத்திற்குமாக பதில் கடித்தை அனுப்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அச்சந்திப்பு வடமாகாண சபையின் நெருக்கடி நிலைமைகளை சீர்செய்துவிடலாம் என்ற முதற்கட்ட நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்திப்பு மற்றும் தற்போதைய நிலைமைகள்  தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,  

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாணசபையின் நிலைவரம் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு பதில் கடிதம் அனுப்பவேண்டிய அவசியம் இருந்தது. 

பதில் கடிதம் அனுப்பும்போது ஏனைய பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடவேண்டிய அவசியமும் இருந்தது. அதன் நிமித்தம் அவர்களுடன் கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து கூட்டமைப்பின் தலைவருக்கு பதிலை அனுப்பியுள்ளேன். 

நான் அனுப்பிய  கடிதத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதிலில் இருந்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எத்தகையது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும். குறிப்பாக இரண்டு அமைச்சர்கள் விடுமுறை தொடர்பில்தான் கூடுதலான விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் என்னால் கூறப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களின் உத்தரவாதம் தொடர்பில், அவர்கள் பின்னிற்பதாகவே அறியமுடிகின்றது. இது தொடர்பிலேயே எனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அவருடைய பதிலில்தான், நான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15