(லியோ நிரோஷ தர்ஷன்) 

முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த விஜயத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். நாளை பாகிஸ்தானுக்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு தொடர்ந்தும் 7 நாட்கள் அங்கு தங்கியிருந்து பலதரப்பட்ட சந்திப்புகளிலும் கலந்துக் கொள்ள உள்ளது.

மஹிந்த  ராஜபக்ஷவின் தொடர் வெளிநாட்டு விஜயங்கள் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது பன்னாட்டு இராஜதந்திர துறையினர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்திய  பிரதமர ; நரேந்திர மோடி  தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவர் பாகிஸ்தானுக்கு செல்கின்றமை முக்கிய விடயமாக கருதப்பட வேண்டியதொன்றாகியுள்ளது.

இலங்கையின் தற்போதைய தேசிய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டால் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மீண்டும் ஆங்காங்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்  மத ஸ்தலங்களை தாக்குகின்றமை, அந்த சமூகத்தின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கின்ற சம்பவங்களும் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற ஒன்றாகி விட்டுள்ளது. 

கடந்த ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைப்பெற்றன. நல்லாட்சியில் மீண்டும் அதே நிலை உருவாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பின்னணியறியாது குழப்பம் அடைந்துள்ளனர். பொதுபல சேனா அமைப்பை தற்போது யார் இயக்குகின்றனர். என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. ஆரம்பத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தற்போது அது சாத்தியமற்ற விடயமாகியுள்ளது.

அவ்வாறாயின் பொதுபலசேனாவின் பின்னணியில் நல்லாட்சி உள்ளதா ? வலுவான வெளிநாடொன்றுள்ளதா என்ற சந்தேகங்கள் பலதரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் ஆதரவு போக்கை வெளிப்படுத்தும் வகையில் அண்மைக்காலமாக பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக கொழும்பில்  கடந்த வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பேசப்பட்டது. 

இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து நாடளாவிய ரீதியில் தனது  தலைமையில்  பேரணிகளை நடத்துவதாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். முதலாவது பேரணி திருகோணமலையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு சூழலில் மஹிந்த ராஜபக்ஷவின் பாகிஸ்தானுக்கான விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.