வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக  இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஊழல்வாதிகளைக் கைது செய்து ஊழலைத் தட்டிக்கேட்டதற்கு தண்டனையா? மக்கள் புரட்சி வெடிக்கட்டும். எங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஜயா, முதல்வரே எடுத்த முடிவை மாற்ற வேண்டாம். வாக்கிற்கு நாம், எம்மை சுரண்ட நீங்களா? போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ம. தியாகராசா, இ. இந்திரராசா, ஜி. ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சிலரும் கலந்துகொண்டனர்.