தமிழரசுக் கட்சி முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானது ஊழல் வாதிகளை பாதுகாக்கின்ற செயற்பாடாகவே அமையும் என ஈ பி.ஆர். எல். எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சி ஊழல் அற்ற ஓர் ஆட்சியை கொண்டு வருவதனை எதிர்த்து ஊழல் வாதிகளை பாதுகாத்து முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வருவதானது ஊழல் வாதிகளை பாதுகாக்கின்ற செயற்பாடாகவே அமையும்.

குறிப்பாக இதனை தமிழரசுசுக் கட்சியின் சுமந்திரன்,மாவை,சிறீதரன் ஆகியோரினது தலைமையிலேயே இவ் ஊழல் வாதிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு நடவடிக்கையாகவே நேற்று முன்தினம் இவர்கள் தமக்கு 20 இற்கும் மேற்பட்டோர் ஆதரவு இருப்பதாகக் கூறி முதலமைச்சர் மீதான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு ஊழல் அற்ற ஓர் ஆட்சியைக் கொண்டு வர இவர்கள் உதவவேண்டும். மாறாக ஊழல் வாதிகளைக் காப்பாற்ற இவர்கள் முனைவர்களாயின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஊழல் வாதிகளாகவே பார்க்கப்படுவார்கள்.இந்நிலையில் இவர்கள் ஊழல் வாதிகளாக இருக்கப்போகிறார்களா? அல்லது ஊழல்வாதிகளை எதிர்ப்பவர்களாக தமிழ் மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை வழங்கப்போகின்றவர்களாக இருக்கப்போகிறார்களா? என்பதை இவர்கள் தீர்மானிக்கின்ற தருணம் ஏற்பட்டுள்ளது.

இல்லாவிடின் இவர்கள் ஊழல் வாதிகளை ஆதரிப்பவர்களாக இருப்பின் இவ்வாறான ஒரு தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து இணைந்து செயற்படமுடியுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.எனவே இவ் இறுதி நேரத்திலாவது தமிழரசுக் கட்சி தான் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். சம்மந்தன் இதனைக் கவனத்தில் எடுத்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.