நானுஓயாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தினால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை நிலமை தொடர்பான விசாரணைகளை இலகுபடுத்தும் நோக்கில் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் இன்று காலை பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது கனரக வாகனமொன்று மோதியதில், குறித்த சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். 

சிறுமியின் உயிரிழப்பால் சினமடைந்த பொதுமக்கள், கனரக வாகனத்துக்கு தீ வைத்ததையடுத்து சம்பவயிடத்தில் தீவிர நிலை ஏற்பட்டது.எவ்வாறாயினும் தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.