அட்டன் பிரதேசத்தில் சேரும் குப்பைகள் கடந்த 17 நாட்களாக அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அட்டன் மணிக்கூட்டு முன்னால் அட்டன் நகர வர்த்தகர்கள் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டன் நகரில் சேரும் கடந்த பல வருடங்களாக அட்டன் குடாகம பகுதியிலேயே அகற்றப்பட்டு வந்த இந்நிலையில் அப்பிரதேச மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதனையடுத்து, அப்பிரதேசத்தில் கழிவற்றுவதற்கு முடியாத நிலை உருவானது. இதனை தொடர்ந்து கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, மஸ்கெலியா போன்ற பிரதேசங்களுக்கு அட்டன் நகரசபை குப்பைகள் கொண்டு சென்று கொட்டப்பட்டன. 

இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக குப்பைகொட்டுவது தடைப்பட்டன. இந்நிலையிலேயே அட்டன் குப்பைகள் கடந்த சில நாட்களாக தேங்கி கிடக்கும் நிலை உருவானது.

இதனால் அட்டன் நகரில் பல இடங்கள் குப்பைகளால் நிறைந்து வழிந்து காணப்படுகின்றன இக்குப்பைகள் காரணமாக பல பிரதேசங்களில் ஈ, இளையான்கள், புழுக்கள் தோன்றி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதுடன் டெங்கு மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

மக்கள் நடமாடும் பகுதிகளிலும் கடை தொகுதிகளிலும் குப்பைகள் நிறைந்து உள்ளதனால் பல ஹோட்டல்கள் மற்றும் ஒரு சில கடைகள் மூடப்பட்டுள்ளன.

வீதிகளில் நிறைந்து காணப்படும் பாரிய குப்பை மேடுகளால் பாரிய சூழல் சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன. மழை நேரங்களில் இக்குப்பைகள் மகாவலி மற்றும் காசல்ரி நீர் தேக்கங்களுக்கு செல்வதனால் இந்த நீரினை குளிப்பதற்காகவும் குடிப்பதற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் மக்கள் பாரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து பிரதேச அரசியல் தலைவர்களும் பொறுப்பதிகாரிகளும் குப்பை கொட்டுவதற்கு இடம் ஒன்றினை பெற்றுகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது இதுவரை பெற்றுக்கொள்ளப்படாமையினால் இப்பிரச்சிரினை மேலும் மேலும் உக்கிரமடைந்துள்ளன. இந்நிலையிலேயே இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை கடந்த ஆறு ஏழு வருடங்களுக்கு முன் அட்டன் நகரசபையினால் மக்கள் கழிவுகளை இடுவதற்கென நகர சபை எல்லைக்குள் பல்வேறு இடங்களில் சுமார் 75000 ரூபா செலவில் 20 குப்பை தொட்டில்கள் சீமெந்தினால் கட்டப்பட்டிருந்தன. இந்த குப்பை தொட்டில்களை அட்டன் டிக்கோயா நகரசபையின் பொறுப்பதிகாரிகள் கடந்த மே 28ம் திகதி உடைத்து அகற்றியதனால் குப்பைகள் வீதி முழுவதும் பரவியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குப்;பை பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்கி பொது மக்களின் சுகாதார பிரச்சினையினை உறுதிபடுத்தப்பட வேண்டுமென இவர்கள் கோரிக்ககை விடுக்கின்றனர்.

எனினும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விஜயம் செய்து குப்பை கொட்டுவதற்கு பத்தனை பகுதியில் சுமார் 5 ஏக்கர் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் இன்றையதினம் அட்டன் நகரில் சகல குப்பைகளையும் அகற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

அட்டன் நகர குப்பைகள் அட்டன் நகரசபை ஊழியர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.