கழிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்காக விரிவான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்படி ஆலோசனையை வழங்கினார். கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி அலுவலர்களிடம் வினவினார்.

உள்ளுராட்சி நிறுவனங்களால் தெரிவு செய்யப்படும் இடங்களில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி சுற்றாடல் பொலிஸாரை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

புத்தளம் அருவக்காறு கழிவகற்றல் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இந்த ஆண்டு 2000 மில்லியன் ரூபா நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

வீதிகளின் இருபுறமும் கழிவுகளை வீசுதல் தொடர்பான நாளாந்த அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சுற்றாடல் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.