ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச நிறுவனமான டெட்ரா டெக் மற்றும் இலங்கை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைஆகியன இணைந்து புதிய நீர்வழங்கல் திட்டத்தின் ஊடாக பதுளை, ஹாலி-எல, எல்ல பகுதிகளுக்கு முதற் தடவையாக 110,000 குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கவுள்ளன.

ஒரு மில்லியன் மனித மணித்தியால பங்களிப்பில் உருவான இத்திட்டமானது இலங்கையின் மிகப் பாதுகாப்பான திட்டமாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்காக உழைத்த தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்தும் தருணம் இது. இதற்குக் காரணம் முறையான மற்றும் பணி நெறிமுறையினை பேணும் வகையிலான பாதுகாப்பு முன்னெடுப்பாகும். இது எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

இத்திட்டத்திற்குரிய 74 மில்லியன் டொலர் நிதியை ஐக்கிய அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் (65 மில்லியன்), இலங்கை அரசாங்கமும் (9 மில்லியன்) வழங்கியிருந்தது.

பதுளை ஹாலி-எல மற்றும் எல்ல ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நீர்வழங்கல் திட்டமானது  அமெரிக்க நிறுவனமான டெட்ரொ டெக் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களான இன்டர்நெஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்ட்டியம் சுபசிங்க கொன் ரக்டர்ஸ  ரன் சவி உடன் இணைந்து கட்டுமானப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சுமார் 40 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்படும் முதல் அணைத் திட்டம் இதுவாகும். இத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், குறித்த அணைக்கட்டானது மூல நீரை சேமித்து வைக்கும் நீர்த் தேக்கமாவும் உருவாக்கப்படும். அதன் கட்டமைப்பில் நீரை பாதுகாப்பாக வெளியேற்றும் முறை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வெள்ளப் பெருக்கின்போது அணைக்கட்டுக்கு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் நீர் வெளியேற்றப்படும்.

இத்திட்டத்தின் ஊடாக நாளொன்றுக்கு 15000 m³ (அண்ணளவாக நாளொன்றுக்கு 4 மில்லியன் கலன்கள்) நீர் வெளியேற்றப்படுவதுடன் மீள் சுழற்சிக்கான பொறி முறை, திடப்பொருட்களை கையாளுதல் ஆகியவற்றுடன் அசுத்தம் அகற்றும் கருவிகளையும் உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நீர் தரத்தினை கொண்டுள்ளது. இங்கு 8 சேமிப்பு தாங்கிகளும் 100 கிலோ மீற்றருக்கும் அதிகமான விநியோக குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மில்லியன் மனித மணித்தியாலங்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஊழியர்களுக்கும் பங்காளர்களுக்கும் விருது வழங்கும் விசேட நிகழ்வு கடந்த மே மாதம் 4 ஆம் திகதி டெட்ரா டெக் நிறுவனத்தினால் பதுளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“மக்களே எமது மிகப்பெரிய சொத்து. இதுபோன்ற திட்டமொன்றை முன்னெடுக்கும் போது உபாதைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஒரு மில்லியன் மனித மணித்தியாலங்களை, ஒரு தனி நபரேனும் காயத்துக்கு உள்ளாகாமல் அடையக் கிடைத்தமை மிகப் பெரிய சாதனையாகும்”என டெட்ரா டெக் இன் பிரதித் தலைவர் சரவணபவன் தெரிவித்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளரும் பதுளை, ஹாலி-எல மற்றும் எல்ல ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளருமான ருவன் லியனகே தனது உரையில், இலங்கையில் நிர்மாணப் பணியாளர்களை கௌரவிக்கும் இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறான நிகழ்வுகளின் ஊடாக ஏனைய கட்டுமான நிறுவனங்கள் இதே மாதிரியான பாதுகாப்பு தரத்தை பின்பற்றி வெவ்வேறு திட்டங்களிலும் பணியாளர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கட்டிட பொறியியல் பீடத்தின் பேராசிரியர் எஸ்.பி.வீரகோன் மற்றும் அவரது பாரியார் வீரகோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

டெட்ரா டெக்கின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விரிவான விளக்கங்கள் வருகை தந்தோரின் ஆர்வத்தை தூண்டுவனவாக அமைந்திருந்தன.