சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணியின் சிறப்பான களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் காரணமாக, அவ்வணி தென்னாப்பிரிக்காவை தோல்வியுறச்செய்து தொடரிலிருந்து வெளியேற்றியது. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி, களத்தடுப்பை தெரிவு செய்தார். மேலும் குறித்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டார். அதேபோல் தென்னாபிரிக்க அணியின் பர்னெல் நீக்கப்பட்டு பெலுக்வாயோ சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி  44.3 ஓவர் நிறைவில் 191 ரன்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் டிகாக் 53 ஓட்டங்களும், டூ பிளசி 36 ஓட்டங்களும், அசிம் அம்லா 35 ஓட்டங்களும் பெற்று கொண்டனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களும், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களும் வீழ்த்தினார்கள். 

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான், ரோகித் சர்மா ஆகியோர்களமிறங்க ரோகித் சர்மா 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்றார். 

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த கோலியுடன் இணைந்த தவான் 78 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழக்கவே, தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கோலி 76 ஓட்டங்களும், யுவராஜ் 23 ஓட்டங்களும் பெற்ற நிலையில் இந்திய அணி 38 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.    

 

குறித்த வெற்றியுடன் சாம்பியன்ஸ் தொடரின் பி- பிரிவில் விளையாடிய அணிகளில் முதலைவகித்து அணியாக இந்திய அரையிறுதிக்குள் நுழைந்ததோடு, போட்டியில் தோல்வியுற்ற தென்னாபிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதேவேளை தொடரில் ஏற்கனவே மூன்று அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், நாளை இடம்பெறும் இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளதோடு, வெற்றி பெறும் அணி அரை இறுதிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.