தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றம் மாணவர்களுக்கான  முன்னோடிப்பரீட்சைகளை வருடந்தோறும் நடத்திவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் இம்முறையும் எதிர்வரும் ஜூலை மாதம்  முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னோடிப்பரீட்சைகளை நடத்துவதற்கு திர்மானித்துள்ளதாக அதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் எம்.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

பரீட்சைக்கான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அறிவிக்கப்பட்டிருந்த விண்ணப்ப முடிவுத்திகதி சீரற்ற காலநிலை காரணமாக மேலும் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் தலைவர் சிவகுமார் பாடசாலை  அதிபர்களிடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வருடந்தோறும் தரம் 5 தரம் 11 மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சைகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. மாகாண கல்வியமைச்சுகளின் ஆலோசனையுடனும் வழிகாட்டலுடனும் மற்றும் சிறப்புத்தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்படும் வினாப்பத்திரங்களை கொண்டு இந்நடவடிக்கைகளை  மன்றம் மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் இம்முறை ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களைச்சேர்ந்த 846  பாடசாலைகளுக்கான விண்ணப்பப்படிவங்களை மன்றம் அனுப்பி வைத்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதியாக 12 ஆம் திகதியை அறிவித்திருந்த போதிலும்  காலநிலை காரணமாக விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதேவேளை வன்னி மாவட்டத்திலிருந்து இம்முறை 6000 மாணவர்கள் பயன்பெறவுள்ளதாக தெரிவித்த தலைவர் சிவகுமார் ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்களும் விண்ணப்பங்களை அனுப்பி வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.