பிரிட்டனில் அறுதி பெரும்பான்மையை பெறுவதற்கு 326 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் இருபெருங் கட்சிகளும் குறித்த பெரும்பான்மையை பெறாததால் அந்நாடு தொங்கு பாராளுமன்றத்தை அமைப்பதற்கு தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நடை பெற்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரசா மே பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜெரமி கார்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார்.

மேலும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான 650 தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அறுதி பெரும்பான்மையை பெறாமையால், வேறுகட்சிகளுடன் கூட்டணி வைத்து தொங்கு பாராளுமன்றத்தை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாராளுமன்ற தேர்தலில் 650 தொகுதிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ஆட்சியமைப்பதற்கு 326 தொகுதிகளை பெற்று அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய தெரேசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 315 தொகுதிகளையும், ஜெரமி கார்பினின் தலைமையிலான தொழிலாளர் கட்சி 261 தொகுதிகளையும் மற்றும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி 35 தொகுதிகளையும் வென்றுள்ளது.

2020 ஆம் ஆண்டுவரையில் ஆட்சியை நடத்துவதற்கான வாய்பை பெற்றிருந்த தெரேசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற, ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டுமென முன்மொழியவே, பாராளுமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது. இருப்பினும் தெரசா மே பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள தவறியுள்ளார்.

இந்நிலையில் தெரசா மே தலைமை வகிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. ஒன்று, வேறு ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சியை அவர் அமைக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளர் கட்சியின் ஜெரமி கார்பினின் சிறுபான்மை அரசுக்கு வழிவிட வேண்டும். ஸ்காட்லாந்து தேசிய கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை இக்கட்சியின் ஆதரவை தெரசா மே பெற்றால் பிரிட்டனில் கூட்டணி ஆட்சி அமைய வாய்புள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறவே, டேவிட் கமரூன் பிரதமராகப் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்யவே, 2016 ஜூலை 13இல் தெரேசா மே பிரதமராகப் பதவியேற்றார்.

இச்சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தேவை. எனவே ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு 2 வருடங்கள் இருக்கும் நிலையில், முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் தெரசா முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது. ஆனால் தேர்தல் முடிவில் தெரேசா மே ஏற்கனவே வைத்திருந்த பெரும்பான்மையை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.