தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல்  அமுலுக்குவரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

 ஒரு கிலோ சீனியின் இறக்குமதி வரி 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் சீனியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அவ்வாறான நிலையில் சீனிக்கு புதிய வரிகளை விதித்துள்ளமையினால் சீனி உள்ளடங்கும் உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும்.

உள்ளூர் சீனி உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதற்காக சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்ற போதிலும் அதில் யதார்த்தம் இல்லை.

எனவே புதிய விலை அதிகரிப்பின் பிரகாரம் 15 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த தேநீர் இருபது ரூபாவாகவும் முப்பத்தைந்து ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பால் தேநீர் நாற்பது ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றார்.