ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலநறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும் சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சூயுனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின்னுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பெறுபேறாக சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக இந்த சிறுநீரக மருத்துவமனை இலங்கைக்கு கிடைத்தது.

200 கட்டில்கள், 100 குருதி சுத்திகரிப்பு கருவிகள், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்யக்கூடிய நவீன சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றுடனான தேசிய மட்டத்திலான இந்த மருத்துவமனை 12 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மூலகாரணம் இனங்காணப்படாத சிறுநீரக நோயினால் நாடுமுழுவதும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்டகால தேவைகளை நிறைவுசெய்வதற்காக நிர்மாணிக்கப்படும் இந்த சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல் எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியினால் நாட்டப்படும்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணி பணிப்பாளர் அசேல இத்தவெல, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோகண கீர்த்தி திசாநாயக்க, பொலநறுவை தேசிய மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சம்பத் இந்திக்க குமார சீன தூதுவர் யீ கின்லிங் உள்ளிட்டோர்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.