கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியால் கட்டார் ரியாலை மாற்றுவதற்கு இலங்கையில் உள்ள வங்கிகள் மறுப்பு தெவித்ததாகவும் இதனால் கட்டாரில் இருந்து வந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள் நேற்று மாலை பலமணி நேரம் கட்டார் ரியாலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தன.

இதனால் கடடாரில் இருந்து வந்த பயணிகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கி,

கட்டாரிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் கட்டார் ரியாலை, இலங்கை பணத்திற்கு மாற்ற வேண்டாம் என ஏனைய வங்கிகளுக்கு தாம் எவ்வித அறிவிப்பும் விடுக்கவில்லை. இச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையங்களில் உள்ள வங்கிகளில் கடமையாற்றிய பகுதிநேர நிர்வாக அதிகாரிகளே கட்டார் ரியாலை மாற்ற வேண்டாம் என உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் இன்று காலை வரை கட்டார் ரியாலை மாற்றுவதில் சிக்கல் நிலை காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கட்டாரில் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடி இலங்கைக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வெளிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.

கட்டார் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் பக்ரேய்ன் உள்ளிட்ட நாடுகள் காட்டருடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்ததையடுத்தே மேற்படி அசாதாரண சூழ்நிலை இலங்கையில் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.