திருகோணமலை மூதூர் பகுதியில் கடந்தவாரம் பாடசாலை வளாகத்தில் வைத்து மூன்று பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

காலை ஒன்றுகூடலுக்கு பின்னர் கல்லூரிக்கு முன்பாக வீதியோரமாக கூடிய மாணவர்கள் இந்த கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் "மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்" பிஞ்சுகளின் வாழ்க்கையில் நஞ்சுவேலை செய்யாதே" நீதி வேண்டும் மாணவர்களுக்கு நீதி வேண்டும்" மாணவர்களை சுயமரியாதையோடு வாழ விடுங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தங்கியவாறும் கண்டன ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

உடனடியாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த தண்டனை என்பதோடு இவ்வாறு பலமுறை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக நாம் வீதியில் இறங்கி நீதி கேட்டும் இன்னும் அந்த குற்றங்களை இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாத நிலையில் இன்னும் இவ்வாறான குற்றங்கள் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படுவதை எம்மால் இனியும் பொறுக்க முடியாது எனவும் குற்றங்களை புரியும் பாதகர்களுக்கு விடுதலைப்புலிகளின் காலத்தில் வழங்கப்பட்டது போன்று உடனடியாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.