சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே நேற்று இரவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என நான் நினைக்கிறேன். 

அவருடைய வருகையை நாங்கள் வரவேற்கிறோம். அவருடைய சந்திப்பில் பல்வேறு விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

குறிப்பாக புரிந்துணர்வே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். 

மேலும் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு வடமாகாணத்திலிருந்து மக்கள் வருவதில்லை. அது எதற்காக என என்னிடம் கேட்டிருந்தார். அதற்கு நான் பதிலளிக்கையில் வடமாகாண மக்கள் பயத்தினாலேயே வருவதில்லை என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கிறேன்.

மேலும் மக்களுக்குள்ள பயத்தை நீக்கினால் மக்கள் அங்கு தாரளமாக வருவார்கள் எனவே அதனை செய்யவேண்டும் என கேட்டிருக்கிறேன்.

அதேபோல் வடமாகாணத்தில் தற்போதுள்ள காணாமல்போனவர்கள் பிரச்சினை, படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் பிரச்சினை மற்றும் வேலையற்ற பிரச்சினை தொடர்பாக கூறியிருந்தேன். 

இந்நிலையில் அவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு எடுத்து கூறவேண்டும் எனவும் கேட்டிருக்கிறேன்.

வடமாகாணத்தில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு தயாராக உள்ளதாக ஒரு நற் செய்தியை அவர் எமக்கு கூறியுள்ளார் என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.