லண்டன் பாலத்தில் தீவிரவாதியொருவர் பாதசாரிகள் மீது   வேனால் மோதி விபத்து ஏற்படுத்தியதில், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அப்பகுதிக்கு ஆயுதமேந்திய பொலிஸார் விரைந்துள்ளனர்.

லண்டன் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் லண்டன் பாலத்தின் அருகே பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இந்த தாக்குதல் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தை அடுத்து ஆயுதங்கள் ஏந்திய ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். 

நேற்று இரவில் நிகழ்ந்த விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் லண்டன் நகரத்தில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள லண்டன் மாநகர பொலிஸார், மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்பதாக லண்டன் பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்கு இங்கிலாந்தில் பொப் பாடகி ஏரியனா கிரேண்ட் நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் எதிர்வரும்  8 ஆம் திகதி லண்டனில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.