திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்குள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்டுகின்றது. 

இப்பள்ளிவாசல் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால் அருகில் தற்காலிகமாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசல்மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வாசலுக்குள், பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்பட்டதாகவும் நிலங்களில் போடப்பட்டிருந்த காபட் மற்றும் பாய்கள் எரிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.