சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டின் ஆரம்ப ஆட்டத்தில் ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது. தமிம் இக்பாலின் சதம் வீணானது.

ஐ.சி.சி தரப்படுத்தலில் முதல் எட்டு அணிகள் அணிகள் இடையிலான ‘மினி உலக கிண்ணம்’ என்று அழைக்கப்படும் 8ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமானது.

இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகளில்  ‘ஏ’ பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளும் ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. 

ஒவ்வொரு அணியும் தமது பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

லண்டன் ஓவலில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தும், பங்களாதேஷ் அணியும் (ஏ பிரிவு) சந்தித்தன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் பங்களாதேஷ் அணியின் இன்னிங்சை தொடங்கினர். மிகவும் எச்சரிக்கையுடன் ஆட்டத்தை தொடங்கிய இவர்கள் முதல் 4 ஓவர்களில் 6 ஓட்டங்களை மாத்திரமே  எடுத்தனர். பின்னர் 10 ஓவர்களில் 36 ஓட்டங்களை மாத்திரமே பங்களாதேஷ் அணியால் பெற முடிந்தது.

தமிம் இக்பால் சதம்

11ஆவது ஓவரில் ஜாக்பாலின் பந்து வீச்சில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த சர்கார் அதிரடிக்கு முற்றுப்புள்ள வைத்தார் ஜாக்பால். இருப்பினும் 28 ஓட்டங்களுடன் அவர் வெளியேறினார். அடுத்து வந்த இம்ருல் கயிஸ் 19 ஓட்டங்களுடன் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து தமிம் இக்பாலும், முஷ்பிகுர் ரஹிமும் கைகோர்த்தனர். அனுபவம் வாய்ந்த இந்த ஜோடி, அவசரமின்றி நேர்த்தியாக ஆடியது.  

எந்தவித சலனமும் இல்லாத இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக தென்பட்டது. ஆடுகளத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிம் இக்பால் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் முஷ்பிகுர் ரஹிம் அரைசதத்தை கடந்தார்.

பங்களாதேஷ் 305 ஓட்டங்கள்

அணியின் ஓட்ட எண்ணிக்கை 261 ஓட்டங்களாக உயர்ந்த போது தமிம் இக்பால் (128 ஓட்டங்கள்;, 142 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) பிளங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 166 ஓட்டங்களை பெற்றது. ஆசியாவுக்கு வெளியே பங்களாதேஷ் ஜோடி ஒன்று 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இக்பாலை தொடர்ந்து அடுத்த பந்திலேயே முஷ்பிகுர் ரஹிமும் (79 ஓட்டங்கள், 72 பந்து, 8 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் பின்னர் சபிர் ரகுமானின் (24 ஓட்டங்கள், 15 பந்து, 3 பவுண்டரி) வெளியேற பங்களாதேஷ் 300 ஓட்டங்களை தாண்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களை குவித்தது. 

இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஷ் அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு 288 ஓட்டங்களை எடுத்ததே பங்களாதேஷ் அணியின் சிறந்த ஓட்ட எண்ணிக்கையான இருந்தது. 

இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விலாப்பகுதி காயத்தில் சிக்கிய கிறிஸ் வோக்ஸ் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

இங்கிலாந்து வெற்றி

பின்னர் 306 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோசன் ரோய் (1 ஓட்டம்) வந்த வேகத்தில் அரங்கு திரும்பினாலும் அலெக்ஸ் ஹெலசும், ஜோ ரூட்டும் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர்.

அபாரமாக ஆடிய இந்த ஜோடி 165 ஓட்டங்களை எட்டிய போது பிரிந்தது. சிக்சர் அடிக்க முயற்சித்து பிடிகொடுத்து வெளியேறிய அலெக்ஸ் ஹெலஸ் 95 (86 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்)  ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார். 

இதன் பின்னர் ஜோ ரூட்டும்,  இயான் மோர்கனும் இணைந்து சிரமமின்றி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஜோ ரூட் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 308 ஓட்டங்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோ ரூட் 133 ஓட்டங்களுடனும் (129 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), மோர்கன் 75 ஓட்டங்களுடனும் (61 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். ஜோ ரூட்டுக்கு இதுவே ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.