கடற்படையினரின் தகவல் ஒன்றின் அடிப்படையின் நிமித்தம் மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள பற்றை பகுதிக்குள் நிலத்தடியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாக தேடுதல் மேற்கொண்டதில் எவ்வித பொருட்களும் கண்டு கொள்ளப்படவில்லை.மன்னார் தாழ்வுபாடு வீதியில் எழுத்தூர் கிராம அலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட தோட்டக்காடு என்னும் இடத்தில் ஒரு பற்றைப் பகுதிக்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இவ்விடயம் மன்னார் பொலிசாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.மன்னார் பொலிசார் இவ் விடயத்தை மன்னார் நீதவானிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று மன்னார் பொலிஸ் அதிகாரிகள் கடற்படை இரானுவம் அதிரடிப்படையினர் மன்னார் பிரதேச செயலாள்ர் கிராம அலுவலர் மன்னார் வைத்திய அத்தியட்சகர் ஆகியோர் சமூகமளித்திருந்த நிலையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் சந்தேகத்துக்கிடமாக காண்பிக்கப்பட்ட நிலம் தோண்டப்பட்டது.சம்பவம் அன்று பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் ஐந்து மணி வரை குறிப்பிட்ட இடத்தை பெக்கோ மூலம் தோண்டிப் பார்த்தபோது அங்கு எந்தவித தடயப் பொருட்களும் கிடைக்கப் பெறவில்லை.