உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்படும் அனர்த்த நிவாரண சேவை திட்டத்தில் பங்குபற்ற முன்னர், அனர்த்த நிவாரண சேவை அலுவலர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களுக்கு நிவாரணமளித்தல் தொடர்பாக நிவாரண சேவைக் குழுக்களுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார். 

திடீர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வினைத்திறனாகவும், சிறந்த ஒழுக்கத்துடனும் செயற்பட்ட அரச அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, தொடர்ந்தும் அந்த ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் நாட்டு மக்கள் அனர்த்தத்துக்குள்ளான போது அவர்களுக்கு பலமூட்டி வெளிநாடுகள் வழங்கிய நிதி மற்றும் பொருள் ரீதியான உதவிகளுக்காகவும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி மற்றும் தேசிய ஒற்றுமை முன்னணி தலைவர் அசாத் சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.