மெல்போர்னில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பறந்துகொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

எம்.எச்.128 என்ற பயணிகள் விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி இரவு 11.11 மணிக்கு மெல்போனில் இருந்து புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, பயணியொருவர் விமானியின் அறைக்குள் புக முற்பட்டார். சக பயணியொருவர் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, தன்னிடம் ஒரு குண்டு இருப்பதாகவும் அதை வெடிக்கச் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.

அதேவேளை, மேலும் சில பயணிகளும் சிப்பந்திகளும் அவரை மடக்கிப் பிடித்துக் கட்டிவைத்தனர்.

இது குறித்து விமானச் சிப்பந்திகள் விமானிக்குத் தகவல் தரவே, அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானத்தை மெல்போனுக்குத் திருப்பினார்.

குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா வந்தவர் என்றும் கூறிய விமான நிலைய அதிகாரிகள், மேலதிக தகவல்கள் முழு விசாரணையின் பின் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.