இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கடையில் நேற்று நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி போட்டியில் இந்திய அணி டக்வர்த் லிவிஸ் முறைப்படி45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மார்ட்டின் குப்டில் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிதானமாக துடுப்பெடுத்தாடிய லுக் ரோன்கி 63 பந்துகளில் 66 ஓட்டங்களை குவித்தார்.

எனினும் அடுத்துவந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணி கடும் சவாலை எதிர்நோக்கியது.

எவ்வாறாயினும் சற்றுநிலைத்தாடிய ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்து அணி கடும் சவாலுக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி 189 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட மொஹமட் சமி மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 190 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை பெற்றவேளை போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியின் வெற்றி டக்வர்த் லிவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.  

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அஜின்கே ரஹானே 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றமளித்தார்.

எனினும் அடுத்து களம் நுளைந்த அணித் தலைவர் விராட் கோஹ்லி அரைச்தம் பெற்று 52 ஓட்டங்களையும், மகேந்திர சிங் டோனி 17 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.