இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், மோரா அழைக்கப்படும் குறித்த சூறாவளியானது மேலும் வலுவடைய கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூறாவளி பட்டியலின் பிரகாரம் தற்போதைய சூறாவளியானது, தாய்லாந்தினால் முன்மொழியப்பட்ட மோரா (MORA) எனும் பெயரில் அழைக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும்,பங்களாதேஷின் சிட்டாகொங் (CHITTAGONG) நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளதாக இனம்காணப்பட்டுள்ளது. 

குறித்த சூறாவளியானது தற்போது மணித்தியாலத்திற்கு 12 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், மேலும் வலுவடைந்த நிலையில் பங்காளதேஷ் கரையோரத்தை நாளை (30.05.2017) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோராவின் தாக்கம் காரணமாக இலங்கையின் சில பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இடையிடையே சற்றுப்பலமான காற்று வீசக்கூடுமெனவும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும், கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.