வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள புயல்காற்று உயர் அமுக்கத்தின் விளைவாக வடக்கு திசை நோக்கி பயணித்தால் மணிக்கு 80 வீதமாக காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவதறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியுள்ள அழுத்தின் காரணமாக வலுவடைந்து சூறாவளியாக உருவெடுத்து வடக்கு திசையை ஊடறுத்து பங்களாதேஷ் வரையில் பயணிக்கும் என்று தற்போதைக்கு வானிலை அவதான மையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

அதனால் நாட்டில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் மத்திய மாகாணம் , சப்ரகமுவ மாகாணம்  மற்றும் காலி மாத்தறை உள்ளிட்ட கடற்பகுதியை அண்டிய பிரதேசங்களில் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. 

25 ஆம் திகதி போன்ற  பாரதூரமான நிலைமை தற்போதைக்கு இல்லாவிடினும் காற்றின் வேகம் அதிகரிப்பதை பொறுத்தே நிலைமையை தீர்மானிக்க வேண்டும். மேற்படி நிலைமை குறித்து ஆராய புதிய இயந்திரங்கள் பொருத்தபட்டிருந்தாலும் 24 மணித்தியாலய தொடர் மழையின் போது அளவீட்டு பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது என்றார்.