நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியன நிரம்பி வழிகின்றன. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த தாழ்நிலப் பிரதேசம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை உட்படப் பல நகரங்கள் வெள்ளத்தினால் கடும் விளைவுகளுக்கு முகங்கொடுத்துள்ளன.

காலியில் ஜின் கங்கை பெருக்கெடுத்ததால், அதைச் சுற்றியுள்ள நெலுவ, ஹபரகட, மொறவக்க, யக்கல ஆகிய பிரதேசங்கள் முற்றிலுமாக வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் களு கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பாலிந்த நகரம், புளத்சிங்கள மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கிரம ஓய பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாத்தறையின் கம்புறுப்பிட்டிய மற்றும் முலட்டியான பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வேகமாக நிரம்பி வரும் களனி ஆற்றிலும், மழை தொடர்ந்து பெய்யுமானால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெய்துவரும் தென்மேற்குப் பருவ மழையால் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், இப்பாதிப்புகள் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளுக்கும் பரவலாம் என்பதால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.