ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் பிலிப்பீன்ஸின் தென்பகுதிக்கு இராணுவத் தளவாடங்களுடன் ஏராளமான இராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவினால் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள முக்கிய பயங்கரவாதியான இஸ்னிலோன் ஹாப்பிலோன் பிலிப்பீன்ஸின் மாராவி நகரில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இராணுவத்தினர் பலர் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், தேடுதல் நடவடிக்கையில் இஸ்னிலோன் தங்கியிருப்பதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.

இதன்போது ஐ.எஸ். ஆதரவு ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனிடையே, குறித்த பகுதியில் உள்ள பல கட்டடங்களுக்குத் தீவைத்த ஆயுத தாரிகள், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். மேலும், தாம் கைப்பற்றிய கட்டிடங்களில் எல்லாம் தமது கறுப்புக் கொடியைப் பறக்கவும் விட்டுள்ளனர்.

இந்தத் திடீர் தாக்குதலையடுத்து பிலிப்பீன்ஸின் தென்பகுதி முழுவதும் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலேயே ஏராளமான இராணுவத்தினரும் போர்த் தளவாடங்களும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலை தொடருமாயின் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்படும் என்று பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி ட்யூடர்தே தெரிவித்துள்ளார்.