ஒருவர் தினமும் சரியான நேரத்தில் உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் அவருக்கு எத்தனை வயதானாலும்ஆரோக்கியமாகத்தான் இருப்பார். ஆனால் தூக்கம் கெட்டு சரியாக உறங்காமல் இருந்தால் ஆரோக்கியம் கெடுவதுடன் மனநலமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தூக்கத்திற்கு அவ்வளவு சக்தியிருக்கிறதா? என கேட்டால் ‘ஆமாம் ’ என்கிறது மருத்துவம்.ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சினை வருவகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

உடலின் ஆரோக்கியம் காக்கப்படவேண்டும் என்பதற்காகவும், மேம்படவேண்டும் என்பதற்காகவும் ஹோர்மோன்கள் மாற்றங்களால் ஏற்படுவதே தூக்கம். இது சரியாகவோ அல்லது இயல்பாகவோ நடக்காமல் போனால் ஏற்படுவது தான் தூக்கமின்மை பிரச்சினை. இந்த பிரச்சனை உருவாவதற்கு முக்கிய காரணமே எம்முள் ஏற்படும் மன அழுத்தம் தான். அத்துடன் மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், அதிகளவிலான பணிச்சுமை, நெருக்கடி, கவலை, திடிரென்று உடல் உறுப்புகளில் எதிர்பாராமல் தோன்றும் வலி என பல காரணங்களை கூறலாம்.

ஒருவர் இயல்பைக்கடந்து அதிகாலையில் விழித்தாலோ, தூங்கி எழுந்தபின்னரும் அசதியாக இருப்பதுபோன்று உணர்ந்தாலோ, யார் எதைப் பற்றி கேட்டாலும் எரிச்சலுடன் பதிலளித்தாலோ, கவனமின்மையால் அவதிப்பட்டாலோ,திடிரென்று சிறிது நேரம் வரை நீடிக்கும் தலைவலி வந்தாலோ அல்லது ஜீரண கோளாறுகள் இருந்தாலோ அவர்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

மூளையில் மெலோடனின் என்ற ஹோர்மோன் சுரக்கிறது. இது எம்முடைய உறக்கத்தின் போது தான் இயங்குகிறது. இவைகளால் தான் உடல் தசைகள்,எலும்புகள் மற்றும் மன நலம் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் மனச் சோர்வு, மன உளைச்சல், உடல் அசதி, உயர் குருதி அழுத்தம் ஆகியவற்றையும் தூக்கமே குணப்படுத்துகிறது.

ஒருவர் நீண்டகாலமாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது ஒரு மாத காலத்திற்கு மேலாக தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருடைய காதுகளுக்கு மட்டும் கற்பனையான ஒலிகள் கேட்பது போலவும், மோசமான ஞாபக மறதியும் ஏற்படும். வேறு சிலருக்கு மூளைக்கும் உடல் உறுப்புகளுக்குமான தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு அதிக சோர்வுடன் ஜீரண கோளாறுகளுடன் எரிச்சலுடன் காணப்படுவர். இதனிடையே தூக்கமின்மை பிரச்சினையை உருவாக்குவதில் புகைக்கும் மதுவிற்கும் அதிகளவிலான தொடர்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

இதற்கு உளவியல் சிகிச்சைகளைத் தொடர்ந்து அளித்தால் இதிலிருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்பலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு பழக்க வழக்கத்தை கடைபிடித்தால் மூளையில் சுரக்கும் மெலோடனின் என்ற ஹோர்மோனின் உற்பத்தியை சமசீராக்கி,ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.

Dr.S R சாமுவேல்

தொகுப்பு அனுஷா.