கடந்த சில காலமாய், மலைய கருத்தியல் -சிந்தனை அடுக்குகளின் மீது அவற்றில் செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் வெளியிருந்து பல்வேறு விதமாக கருத்துக்கள் தெளிபடுவது  கிரமமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

இவற்றை சிலர் கருத்தியல் ரீதியான தாக்குதல் எனவும் வேறு சிலர் மலைய சமூகத்துள் இடம் பெற முயலும் கிரமமான ஊடுருவல் முயற்சி எனவும் இவற்றை பலவிதமாக வரையறை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் இங்கிருந்து வெளி செல்வதும் வெளி இருந்து உள்வரவதும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த காலம் போன்று இன்றும் நடந்தேறவே செய்யும்.

இத்தகைய  சுவாத்திய நிலை மலையத்திற்கு மாத்திரம் என்று இன்றி ஏனைய சமூகங்களுக்கும், வடகிழக்கு, தெற்கு அல்லது இஸ்லாமிய சமூகங்கள் இவை அனைத்திற்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. இருந்து வந்துள்ளது.

இருந்தும் இதன் உக்கிரத்தன்மை காலத்திற்கு காலம் வித்தியாசப்பட்டுள்ளது என்பதும் உண்மையே. 

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து வந்த காலப்பகுதியை ஓர் வசதிக்காக, எமது மிக அண்மித்த துவக்கப் புள்ளியாக கொண்டால், அதிலிருந்து விரிந்துள்ளவை ஏராளம் எனலாம்.

சிற்சில நூல் வெளியீட்டுகள் மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ், சி. கந்தையாவின் சிதைக்கப்பட்ட மலையக வரலாறு ஈறாக) பின் தேர்தல்கள், பிறகு புதிதாக அங்கீகாரத்திற்கு உள்ளாகியிருக்கும் பாராளுமன்ற தலைவர்கள், கட்சிகள், மேலும் சிந்தனா ரீதியாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கும் பல்வேறுப்பட்ட அரசியல் ஆலோசனைகள், வரைபுகள், இலக்கியங்கள், பின் கூடவே புனரமைக்கப்பட வேண்டிய அரசியல் யாப்புக்கான பிரேரணைகள் இப்படி ஏராளமானவை வந்து குவிந்துள்ளன. 

இச்சூழலில், இவற்றில் மிக நுணுக்காமாயும் தூக்கலாயும் முளை கொண்டுள்ள சில கருத்தியல்களை, நோக்குதலும் அவற்றின் இன்றைய நாளைய செல்வாக்குகளை நாடிப் பிடிக்க முனைவதுமே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

மர்ம முடிச்சுகள்

முதலாவது மர்ம முடிச்சு ராஜபக்ஷ ஆட்சியின் போது, சகஜமாக நடைபெற்ற கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், பின் அடுத்தடுத்தாக காவத்தை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் மர்ம கொலைகள், பலவந்தங்கள், பின் இவையும் போதாதென நாடு முழுவதும் - முக்கியமாய் தமிழ் பெண்களை குறி வைத்து - இரத்தத்தை உறிஞ்சவென தேடித் திரிந்த ஒரு வகை கிரிஸ் பூத கூட்டங்கள் என அறியப்பட்ட மர்மங்கள் - இப்படி மர்மங்களை அடுத்து மர்மங்களாய் நாடு முழுவதுமிருந்த தமிழர்களை பதைபதைப்பிற்குள் உள்ளாக்கிய அவலங்கள் ஒருபுறம் - இவையும் இவை Nபுhன்ற வேறு பல எண்ணற்ற அவலங்களும் கூடவே முஸ்லிம் சமுதாயத்தின் தர்கா நகர் உட்பட்ட அனேக வௌ;வேறு விதமான தாக்குதல்களையும் அடுத்து சிறுபான்மை சமூகங்கள் ஒன்று திரண்டு ஓர் மாற்றத்தை தேடி, ஏங்கி ஓர் முகமாய் ஒரு நிலைப்பாடுடன் தவிர்க்க செய்தது. மலையத்தின் அரசியல் கட்சி ஒன்று மாத்திரம் ஓர் பெரும் புதிராய், அத்தனை மக்களின் ஒன்றிணைந்த உணர்வுக்கெதிராய் ஜனாதிபதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தர எடுத்த முடிவு இப்புதிய முளைகளின் முதலாவது மர்ம முடிச்செனலாம்.

இம்முடிச்சானது இன்று வரை எமது தமிழ் ஊடக ஆய்வாளர்களால் அல்லது ஏனைய பிறரால் அவிழ்க்கப்படாத நிலையில் நல்லிணக்கம் நடைமுறைக்கு வந்து சேர்ந்தது.

நல்லிணக்கத்தால் மலையகத்திற்கு கிடைத்ததும் கிடைக்காததும்.

நல்லிணக்கத்தின் வரவை தொடர்ந்து அதுவரை காலமும் கோலோச்சியிருந்தோர் ஆயுத பேர்வழிகளின் சர்வாதிகார அடாவடித் தனங்களில் ஓர் தளர்வு நிகழத்தான் செய்தது.

முக்கியமாக, ஒருவர் ஹட்டனில் பஸ் ஏறி கொழும்பில் சென்று நிச்சயம் இறங்கி விடுவார் என்றளவிலாவது ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டதாயிற்று. (முன்னர் அதுவும் கிடையாது என்பதை கூற வேண்டிய அவசியமில்லை.)

அதாவது, தர்கா நகர் தாக்குதல்கள், கீரீஸ் பூதங்களின் தலைவிரிப்பு - இவற்றுக்கு தற்சமயம் ஓய்வு அளிக்கப்பட்டு திரை மறைவில் சென்று அமர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை நல்லிணக்கம் ஓரளவு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

மறுபுறத்தில், மலையகத்தை பொறுத்தமட்டில் டிக்கோயா வைத்தியசாலையின் திறப்பு (அரசியல் கட்சி ஒன்று விடாப்பிடியாக முறைத்தவாறு நின்றாலும்) வீட்டுத் திட்டங்களை, காணி உறுதி வழங்குகை (பத்து) வருடங்கள் முன்பு போலி வீட்டுறுதி வழங்கியது போன்றில்லாது, சட்டரீதியாக) வழங்கப்பட்டமை போன்ற, ஓரளவு தளர்வான மூச்சுக்காற்று மலையக மக்கள்  மத்தியிலும்  வீச  நல்லிணக்கம் ஓரளவு ஏற்பாடு செய்துள்ளது என்பதும் பிறிதொரு உண்மையே.

ஆனால் சம்பள உயர்வு, மேலும் சில தோட்டங்களை மூடி விடுதற்கான முதல் நகர்வாய் அவ்வவ் தோட்டங்களில் சில ஒதுக்கப்பட்ட பகுதிகளை மூடுதல், அல்லது சில பகுதிகளை ஒதுக்குவதற்கென்றே திட்டமிட்டு ஒதுக்குதல், அரசியல் வரையில் முக்கியமான மலையம் சார்ந்த சரத்துக்களை உள்ளடக்காமை - இவையும் இன்ன பிறவும் கூறப்பட்ட நல்லிணக்கத்தின் ஒவ்வாத பகுதிகளாக இன்றும் திகழ்கின்றன.

இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நல்லிணக்கம் என்பது மலையகத்தை பொறுத்தமட்டில் தன் அடிப்படை விகசிப்புகளை இன்னும் கூட குறிப்பிட்ட அளவேனும் பூரணத்துவப்படுத்தாத தன் ஆரம்ப படி நிலையிலேயே உள்ளது என்பதும் தெளிவு. 

இனி கேள்வி, இன்று மீள வளர்ந்துள்ள, வளரும் ஒரு இனவாத சூழலில், முக்கியமாக பலமிழந்த ஓர் சுதந்திர கட்சி - ஐ.தே. கட்சி கூட்டரசின் பிண்ணனியில் மலையகம் சார்ந்த ஆக்கபூர்வமான  நடவடிக்கைகள் மேலும் சாத்தியப்படாதெனில், எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடைமுறை என்ன? என்ற ஓர் அழுத்தமான கேள்வி நிறைந்த புள்ளியில் மலையம் இன்று நிற்கின்றதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சூழலிலேயே முன் கூறப்பட்ட பல்வேறு கருத்தியல் சார்ந்த அணுகுமுறைகள், மலையகத்துள் மேற்கொள்ளப்படும்; ஊடுருவல் முயற்சிகள், அவை முன்வைக்கக்கூடிய மலையக தீர்வுகள் - அவற்றின் செல்வாக்குகள் - இவை அனைத்தும் இடம் பெறுவதாக உளது.

மலையகத்தை அரவணைக்கும் இன்றைய வடக்கின் முயற்சிகள்

இவற்றுள், எவரது பார்வைக்கும் மிக இலகுவாக தட்டக் கூடியது மலையக மக்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க இன்னமும் தொழிற்சங்க தலைமைகளில் தங்கியிராது “நாம் தமிழர்” என்ற ரீதியில் அனைத்து தமிழர்களுடனும் ஒன்றிணைய வேண்டும் என்று எழுந்துள்ள புதிய கோரிக்கையாகும்.

ஜல்லிக்கட்டாகட்டும் அல்லது வேறு எந்த கட்டாகட்டும், நாம் தமிழர் என கட்டுறுவதே எமக்கு பெருமை - எனும் ரீதிpயல் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மலையகம் சார்ந்த மேலோட்டமான இக்கண்ணோட்டத்தின் கறாரான ஆழ்ந்த அரசியல் கருத்தாக்க பரிணமிப்பை திரு.நிலாந்தன், திரு.சி.ஆ.யோதிலிங்கம் போன்ற மூத்த எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், வடமாகாண சபை முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் போன்றோரின் அரசியல் செயற்பாடுகளிலும் தெளிவுற இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

திரு. விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் ஆன்மீக தலைவராகவும் அரசியல் தலைவராகவும் இன்று பரிணமித்துள்ளார் என அவருக்கான பிம்பம் தமிழ் ஏடுகளில் கணிசமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மே தினமாகட்டும், அரசியல் யாப்பு தொடர்பான வரைபுகளாகட்டும் 'மலையகம்' எனும் விடயத்தை அவர் தனது செயற்பாடுகளில் மறந்தாரில்லை.

இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க : https://asiriyanblog.files.wordpress.com/2017/05/paper-2017-final-for-web.pdf