நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி மற்றும்  ஓட்ட எண்ணிக்கைகளின் விபரங்கள் என்பவற்றை போட்டிக்கு முதலிலேயே எதிர்வுகூறிய டுவிட்டர் கணக்கு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த டுவிட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஏறக்குறைய இடம்பெற்றுள்ளன.

அதாவது இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெறும் அணி எதுவாக இருந்தாலும், களத்தடுப்பில் முதலில் பூனே அணி ஈடுபடும். அதுமாத்திரமின்றி முதலில் துடுப்பெடுத்தாடும் மும்பை அணி 120 -130 இடையில் ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை கைப்பற்றும்.

போட்டியில் ஒரு “நோ போல்” பந்து கூட வீசப்படாதென்பதுடன், மும்பை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் பொல்லார்ட் ஒரு ஆறு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொடுப்பார். 

மும்பை அணியின் பார்த்திவ் பட்டேல் மற்றும் பூனே அணியின் ராஹுல் டிருபாதி ஆகியோர் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழப்பர்.

பூனே அணியின் தலைவர் ஸ்மித்தின் ஓட்ட வேகம் 100 இற்கு குறைவாகவே இருப்பதுடன், போட்டியின் அதிக ஓட்டங்களையும் அவர் பதிவுசெய்வார்.

இதேவேளை போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெறவில்லையெனவும், இது எனது தனிப்பட்ட எதிர்வுகூறல் எனவும் குறித்த டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு மும்பை அணி இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.