வேட்டைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் யானையொன்று நிலைகுலைந்து விழுந்ததில் அனுபவம் மிக்க வேட்டைக்காரர் பலியானார்.

தியூனிஸ் போத்தா (51) என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேட்டையாடுவதில் மிகுந்த அனுபவம் கொண்ட இவர், சுற்றுலாவாசிகளுடன் சேர்ந்து காடுகளில் வேட்டையாடுவதில் புகழ்பெற்றவர். இதற்காக இவர் பெருந்தொகைப் பணத்தையும் அறவிட்டு வந்தவர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸிம்பாப்வேயில், க்வாய் என்ற கிராமத்தில் சுற்றுலாவாசிகளுடன் வேட்டையில் ஈடுபட்டிருந்த போத்தா, யானைக் கூட்டம் ஒன்றைக் கண்டு நெருங்கிச் சென்று அதில் ஒரு யானையைக் குறிவைத்துச் சுட்டார். எனினும், போத்தாவுக்கு அருகாமையில் நின்றிருந்த யானை, சற்றும் எதிர்பாராமல் போத்தாவைத் தும்பிக்கையால் தூக்கியெடுத்தது.

இதைக் கண்டு பயந்த மற்றொரு வேட்டைக்காரர், யானை மீது அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் நிலைகுலைந்த யானை சரிந்து விழுந்தது. இதன்போது யானைக்கும் நிலத்துக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட போத்தா உடல் நசுங்கி பலியானார்.

இச்சம்பவத்தையடுத்து, யானை வேட்டையை சட்ட விரோதமானதாக அறிவிக்கும்படி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.