(ஜெகதீஸ்)

மகாணசபைகளின் பதவி காலத்தை பாராளுமன்றத்தின் பெரும்பாண்மையின்றி நீடிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறானதொரு விசேட சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல்களை கண்கானிக்கும் (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தல்களை கண்கானிக்கும் (பெப்ரல்) அமைப்பின்; தலைவர் ரோகண ஹெட்டியாராச்சி குறிப்பிடுகையில், மகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் அதற்கான பதவிகாலத்தை மேலும் நீடிக்கும் வகையிலான விசேட சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமாயின் தற்போதைய சூழலில் குறித்த சட்டமூலம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும்.

இந்நிலையில் மாகாணசபைகளின் பதவிகாலத்தை நீடிப்பதற்கான விசேட சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பாண்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படுமாயினும், அதன்பின்னர் குறித்த விசேட சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனைகள் முன்வைக்கப்படுவதற்காக உயர் நீதி மன்றத்தில் அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்ட மூலத்திற்கான அங்கிகாரத்தை பெரும் பொருட்டு அதனை மக்கள் கருத்தறிய உயர் நீதிமன்றத்தால் முன்வைக்கப்படும்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மாகாணசபைகளின் பதவிகாலத்தை நீடிப்பதற்கு நாட்டு பிரஜைகள், சிவில் அமைப்பினர் மற்றும் புத்திஜீவிகள் இதற்கு தமது எதிர்ப்பினையே நிச்சயம் வெளிப்படுத்துவர். மக்களது ஆதரவின்றிய குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்படுவது சாத்தியமற்ற விடயமாகும் என ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பதால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட்டு எதிரணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன். தேர்தல்கள் தொடர்ந்தும் காலத்தாமத்தப்படுத்தப்படுவதால் மக்களின் அடிப்படை உரிமைகளிலும் பாதிப்பேற்பட்டுள்ளதாகவும் சிவில் அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.