ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பூனே அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை  அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதல் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய மும்பை அணி கடும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய குர்னால் பாண்டியா 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஜயதேவ் உனட்கட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 130 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பூனே அணி ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து கிண்ணத்தை தவறவிட்டது.

ஒரு கட்டத்தில் பூனே அணி இறுதி ஓவரின் 5 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெறும் கட்டத்தில் இருந்தது.

எனினும் பூனே அணியின் திவாரி மற்றும் அணித்தலைவர் ஸ்மித் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் வெற்றி வாய்ப்பு பரிபோனது.

பூனே அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மித் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மிச்சல் ஜோன்சன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், ஜஸ்பிரிட் பும்ரா  2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.