கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் வல்லுறவுக்குட்படுத்தி மயக்கமான நிலையில் வாழை இலையால் மூடி தப்பி சென்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மலையக ஆய்வாளர் அமைப்புடன் இணைந்த மீனாட்சி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை இன்று காலை கந்தப்பளை நகரில் நடத்தியது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் குறித்த நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தேயிலை மலை தோட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக கந்தப்பளை நகரத்திற்கு வந்தது. இதில் சுமார் 300ற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டனர்.

கந்தப்பளை பொலிஸார் போராட்டத்தை முன்னெடுக்க தடைசெய்த போதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் சட்டவிரோத சாராய தவரணைகளை மூடு, மது அருந்தும் காமுகனிடமிருந்து எமது பிள்ளைகளை காப்பாற்று, மலையக மக்களை போதைக்கு அடிமையாக்காதே, வல்லுறவில் ஈடுப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கு என்ற வாசகங்களுக்கும், எழுப்பிய கோசங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.