வெள்ளவத்தையில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தில் ஹட்டன், பத்தனையைச் சேர்ந்த 20 வயதுடைய தனது மகன் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடித் தருமாறு கோரிய போதும், அதிகாரிகள் அது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை எனவும் தந்தையொருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர் தெரிவிக்கப்படுகின்றது.  

 காய­ம­டைந்­த­வர்கள் களு­போ­வில - கொழும்பு தெற்கு போதன வைத்­தி­ய­சா­லையிலும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையிலும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். களு­போ­வில கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 14 பேரில் இரு­வரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக வைத்­திய சாலையின் பேச்­சாளர் அசேல குண­வர்­தன தெரி­வித்தார்.

இந்நிலையில் குறித்த கட்டடத்தில் வேலை செய்த ஹட்டன் பத்தனையைச் சேரந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்ற தனது மகன் காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

'நேற்று 11 மணியளவில் சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்டேன். 

எனது மகன் வேலைக்கு வந்து ஒருமாத காலமாகின்றது. இதற்கான சாட்சியும் என்னிடம் உள்ளது.

அண்மையில் வெசாக் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் இங்கு தொழிலுக்கு வந்து விட்டார்.

சம்பவம் அறிந்து இங்கு வந்து பார்த்த போது எனது மகனை மாத்திரம் காணவில்லை.

உரிய அதிகாரிகள் எனது மகனை தேடி தருமாறு கோரிய போதும், பார்ப்போம் பார்ப்போம் என அசமந்தமாக பதிலளித்தனர்.

வைத்தியசாலையிலும் சென்று தேடிப்பார்த்தேன். ஆனால் மகனை காணவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன்.

நேற்று முதல் இரவு பகலா இங்கே இருக்கின்றேன். இதுவரை எனக்கு இந்த கட்டடத்தின் அதிகாரிகள் உரிய பதிலை தரவில்லை.

யாருமே கவனத்தில் கொள்வது போன்று தெரியவில்லை. தேடி தருகின்றோம் என்று கூட சொல்ல மாட்டிகின்றார்கள். மகனின் கையடக்கத் தொலைபேசியும் வேலை செய்ய மாட்டிது.

காணாமல் போனவரின் நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் குறித்த மாடிக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது நேற்று கடமையில் இருந்த முகாமையாளருக்குத் தான் தெரியும். உள்ளே எத்தனை பேர் வேலை செய்தார்கள். அவர்களில் எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டள்ளார்கள் என்ற தகவலையும் வெளியிடாமல் உள்ளார்கள்.

நான்கு பேரில் ஒருவர் காணாமல் போயுள்ளார். நான்கு பேர் மாத்திரமே உள்ளே சிக்கியுள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

இந்த கட்டடத்தில் வேலை செய்தவர்கள் தற்போது உண்பதற்கு உணவின்றி இடமின்றி தவிக்கின்றார்கள்.

 இந்த கட்டத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை வந்து நேரில் சந்திக்கவும் இல்லை. நாங்களே இவர்களுக்கான  உணவுகளையும் வழங்கி வருகின்றோம் என்றார்.