மாசடைந்த புறச்சூழல், மண், காற்று, குடிநீர் ஆகியவற்றாலும், அதிகரித்து வரும் வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை கழிவுகள், அருகிவரும் அரிய மரங்கள் இவற்றின் காரணமாக மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதே கேள்விக்குறியாகிவருகிறது. அதிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக ஓஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதன் காரணமாக அதிகமான பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.

இவர்கள் தங்களின் பாதிப்புகுறைவதற்காக சிலவற்றைகடைபிடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எப்போதும் சுத்தமான படுக்கையில் தான் உறங்கவேண்டும். தலையணை உறையை வாரம் ஒரு முறை மாற்றவேண்டும். அதே போல் படுக்கும் போது தலையை சற்று உயர்த்தி உறங்குவது சுவாச செயல்பாட்டிற்கு நல்லது. கம்பளி ஆடை, கம்பளி போர்வை மற்றும் கம்பளியிலான படுக்கை விரிப்புகளை தவிர்த்திடவேண்டும். அதிக குளிர் காற்று, பனி மற்றும் ஈரப்பாங்கான இடங்களில் உலாவ வேண்டாம். அலுவலகம் மற்றும் வீடுகளில் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் அதனையும் அளவுடனேயே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லது அதிக நேரம் அங்கிருந்து பணியாற்றவேண்டாம். முகத்திற்கு பவுடர் போட்டுக்கொள்ளவேண்டாம். 

அதே போல் அதிக துக்கம், அதிக பயம், அதிக கோபம், மன வேதனை போன்ற உணர்வுகளுக்கு இடமளிக்காதீர்கள்.இது மூச்சிரைப்பை அதிகப்படுத்தும். வாசனைத்திரவியங்கள், அதிக மணம் கொண்டசோப், வாசனைக்காக பயன்படுத்தும் ஜவ்வாது, ஊதுபத்தி, சாம்பிராணி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தலைகுளிக்கும் போது அதிக நேரம் வேண்டாம். சீயக்காயிற்கு பதிலாக மென்மையான ஷாம்பூவையே பயன்படுத்தலாம்.

புகைப்பழக்கம் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் புகையோ மதுவோ அறவே தொடவேண்டாம். பயணங்களில் போது சுத்தமான பருத்தி கைக்குட்டைகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொள்வது நல்லது.

இவையெல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டே இதற்கான நிவாரணங்களையும் கடைபிடிக்கவேண்டும். இரவு நேரங்களில் திடிரென்று மூச்சிரைப்பு அதிகமாகிவிட்டால் கற்பூரவல்லி இலை, துளசி இலை, கரிசலாங்கண்ணி என இவையனைத்தையும் கொஞ்சம் பறித்து கஷாயமாக வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்ச்சியும் கிடைக்கும் சுவாசமும் சீராகும். அதே போல் தங்களின் அன்றாட உணவில் கற்பூரவல்லி இலைகளையும், தூதுவளை கீரையையும் எந்த வடிவிலேனும் சேர்த்துக்கொள்ளவும். அதே போல் தேநீர் அருந்தும் பழக்கமிருந்தால் தேயிலைப் பதிலாக கரிசலாங்கண்ணி கீரையிலையை பயன்படுத்தி அருந்தினால் நல்ல பலன்கிட்டும்.

ஒரு சிலருக்கு சளி கட்டிகொண்டு மூச்சுகுழலில் இருந்து வெளிவர சிரமமாக இருக்கும். இவர்கள் ஆடாத்தொடை இலைச்சாற்றை 10  மில்லி அருந்தினால் சளி இளகும். சுவாசம் இயல்பாகும். ஆனால் இதனை தினமும் அருந்தி வரவேண்டும். இவற்றையெல்லாம்விட தினமும் இரவு உறங்கச்செல்லும் முன் பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி இரவு 7 மணிக்குள் அருந்தினால் ஓஸ்துமாரை விரட்டலாம்.

Dr. ஜி சிவராமன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்