ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே அணியின் வீரர்களான மஹேந்திரசிங் டோனி மற்றும்  வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பையின் வெற்றிக் கனவை தகர்த்து, புனே அணியை இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைக்க உதவினர்.

டோனியின் துடுப்பாட்டமும் வொஷிங்டன் சுந்தரின் அதிரடி பந்து வீச்சுமே புனே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இப்போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 16 ஓட்டங்களுக்கு மும்பை அணயின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய வொஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு ஐ.பி.எல். தொடரில் முக்கிய நபராகவும் பிரகாசமானார்.

ஏற்கனவே இவருடைய பெயரே ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. 

அதாவது தமிழக வீரர் ஒருவரின் பெயரில் ஏன் வொஷிங்டன் என காணப்படுகின்றது என ரசிகர்களுக்கு கேள்வி குறியாகவே இருந்தது.

மும்பைக்கு எதிரான போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் வொஷிங்டன் சுந்தரின் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் தனது மகனுக்கு வொஷிங்டன் சுந்தர் என்ற பெயர் ஏன் வந்தது என அவருடைய தந்தையான எம். சுந்தர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்து ரசிகர்களின் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 தந்தையின் பேட்டியில்,   

'சென்னை திருவல்லிக்கேணியில் நான் வசித்த வீதியிலிருந்து இரண்டு வீதிகளுக்கு அப்பால் முன்னாள் இராணுவ வீரர் பி.டி. வொஷிங்டன் என்பவர் வசித்து வந்தார். 

எனது சிறு வயதில் கோட்பாதராக இருந்தவர் அவர்தான். நான் ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டிருந்தேன். எனக்கு பாடசாலை  சீருடை, பாடசாலை கட்டணம், புத்தகம் வாங்கி கொடுத்தது வொஷிங்டன்தான்.

 கோட்பாதர் வொஷிங்டன் மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். வொஷிங்டன் தனது சைக்கிளில் என்னை கடற்கரைக்கு  அழைத்துச் செல்வார். கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் அதிகம். என்னையும் ஊக்கப்படுத்தியபடி இருந்தார். அவரால்தான் நான் படிக்கவும், சிறப்பாக விளையாடவும் முடிந்தது.

1999ஆம் ஆண்டு வொஷிங்டன் காலமானார். அந்த ஆண்டுதான் எனது மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

பேறுகாலத்தின்போது எனது மனைவி மிகவும் சிரமங்களை சந்தித்தார். கடவுள் அருளால் குழந்தையும், தாயும் நலமாகினர். 

இந்து முறைப்படி குழந்தையின் காதில் ஸ்ரீநிவாசன் என பெயரை ஓதினேன். ஆனால், பி.டி. வொஷிங்டன் மீதான அன்பால் பிறகு அவரது பெயரை எனது மகனுக்கு சூட்டினேன். இப்படித்தான் வொஷிங்டன் சுந்தர் என எனது மகனுக்கு பெயர் கிடைத்தது என  எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் சுந்தர் என்ற பெயரை வைத்து இணையத்தில் பலர் கேலிக்கையான விடயங்களை பதிவேற்றி வந்தனர். எனினும் ஒரு தந்தையின் நன்றி மறவாத அன்பே இந்த பெயருக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள வொஷிங்டன் சுந்தர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.