தன்னை காதலித்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை, அவரது காதலி துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஹமிப்பூர் குன்டேல்கண்ட் எனும் பகுதியில், அசோக் யாதவ் என்பவர் தான் வேலை செய்த வைத்தியசாலையிலுள்ள சக பணியாள பெண்ணை காதலித்துள்ளார்.

இந்நிலையில் அசோக் யாதவுக்கு, அவரது பெற்றோர் வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதுபற்றி அசோக் யாதவ் அவரது காதலிக்கு அறிவிக்காமல் இருந்துள்ளார். 

அத்தோடு காதலியை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இச்சூழலில் அசோக் யாதவின் திருமண வரவேற்பு நிகழ்வு இடம்பெறுகின்றதை கேள்வியுற்ற அவரது காதலி, திருமணம் மண்டபத்திற்கு சென்று, மனமேடையிலிருந்து அவரது காதலனை துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் அவருக்கு துணை புரிந்த மூன்று இளைஞர்கள் உள்ளிட்டோரை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.