தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் சென் கிளாயர் பகுதியில் வைத்து இன்று காலை 8.30 மணியளவில் சிறுத்தைக் குட்டியொன்று தலவாக்கலை பொலிஸாரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.  

குறித்த குட்டியானது வாகனமொன்றில் அடிபட்டு சிறு காயங்களுடன் வீதியோரமாக கிடந்ததை அவதானித்த பிரதேச மக்கள், பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுத்தைக் குட்டியை உயிருடன் மீட்டு தலவாக்கலை மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர்.

அங்கு சிறுத்தைக்குட்டிக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வனஜீவராசி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

பெண் சிறுத்தைக் குட்டியே இவ்வாறு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.