பெற்றோல் குண்டுகள், கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - பாணந்துறை, வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம்

Published By: Priyatharshan

17 May, 2017 | 10:19 AM
image

பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

நேற்று முன்தினமும் நேற்றும் இவ்விரு தாக்குதல்  சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வெவ்வேறான இரு சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  

பாணந்துறை பழைய பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களிடையே அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை பகுதியில் உள்ள பள்ளிவாசலானது கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,

 வெல்லம்பிட்டி, கொஹிலவத்தை இப்றாஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் மீது நேற்று நள்ளிரவு 01.30மணியளவில் இனம் தெரியாதவா்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

வேன் ஒன்றில் வந்த சுமார் 8பேர் கொண்ட கும்பல் ஒன்றே மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள்  பள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் மீதேறி உள்ளே நுழைந்து, நுழைவாயில் கதவையும் உடைத்துள்ளதுடன் பள்ளிவாசலின் கண்ணாடிகள், கதவு மற்றும்  ஜன்னல் போன்றவற்றை கற்களால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.  அத்துடன் பள்ளிவாசலின் அறிவித்தல் பலகையையும் சேதப்படுத்தியுள்ளனர். கற்கலாலும் பொல்லுகளாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் இடம்பெறும் போது பள்ளிவாசலின் மேல் மாடியில் பள்ளிவாசல் நிறப்பூச்சு (பெயிண்ட்) வேலைக்காக தங்கியிருந்தவர்கள் சத்தமிட்டதும்  வந்திருந்த கும்பல் ஓடியதாக அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்திருந்ததாகவும்  தாக்குதல் நடத்தும் போது, அவர்களில் ஒருவர் அதனை    வீடியோ எடுத்தார் என்றும் அதனைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

 இந்த  நிலையில் நேற்றுக் காலை ஸ்தலத்துக்கு சென்ற வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர். 

மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் நுகேகொடை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாத் ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்பு பொலிஸ் குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிவாசலின் தலைவர் முஹம்மத் பஸீன் கூறுகையில்,

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில்  குழுவொன்று பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு வந்தவர்கள் பள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் மீதேறி பள்ளிவாசல் வளாகத்துக்குள்  நுழைந்துள்ளனர். அவர்களில் 2பேர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் நடத்தப்படுவதை படம் எடுத்துள்ளார். 

இவர்களின் தாக்குதலால் பள்ளிவாசலின் கண்ணாடி, கதவு மற்றும் அறிவித்தல் பலகை என்பன கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்கள் சத்தமிடவே, வந்தவர்கள் ஓடியுள்ளனர். சுமார் 5 நிமிடத்துக்குள்ளே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அறிவித்தல் பலகை மீது கையால் தாக்கியதன் காரணமாக அவரது கையில் பாரிய வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கின்றோம். 

இரத்தம் தோய்ந்த நிலையில் அவரது கை ரேகை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அந்த இடம் பூராகவும் இரத்தம் வடிந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவற்றையல்லாம் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் படம் எடுத்ததுடன் கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்று எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியாது. ஊரில் இருக்கும் சிங்கள மக்கள் மிகவும் அன்னியோன்னியமாகவே எங்களுடன் இருந்து வருகின்றனர். அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கின்போது இந்த பள்ளிவாசல் ஊடாகவே சிங்கள மக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டோம். அதனால் ஊரில் இருக்கும் சிங்கள மக்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்க மாட்டார்கள். வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்தவர்களாலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன் என்றார்.

இதனிடையே பாணந்துறை பகுதியில் பள்ளிவாசல் மீதான தாக்குதலானது நேற்று முன் தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.     நேற்று முன் தினம்  அதிகாலை 3.00மணியலவில் பள்ளி வாயலுக்கு பின்புறமாக உள்ள யன்னல் வழியாக மேல்மாடியின் கண்ணாடியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்பட்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பள்ளிவாசலின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அறிய முடிகிறது. 

குறித்த முஸ்லிம் பள்ளிவாசல்  அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான  வீடுகள் எவையும்  இல்லை. எனினும்  முஸ்லிம் வியாபாரிகளுக்குரிய கடைகள் 50 ற்கும் மேல் உள்ளதாக அறியப்படும் நிலையில், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வருவோர் தொழுகைகளை நிறைவேற்றும் முகமாகவே இந்த பள்ளிவாசல் கடைகளிடையே அமைக்கப்பட்டுள்ளது. 

இப்பள்ளிவாசலுக்கு பின் பக்கமாக பாணந்துறை குப்பை மேடு அமைந்துள்ள நிலையில் அப்பகுதியை நோக்கி பள்ளிவாசலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல் மாடிக்கு பெற்றோல் நிரப்பட்ட போத்தல்கள் ஊடாக தயாரிக்கப்படும் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சிங்கள மக்கள்   பொலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்தியதையடுத்தே பொலிஸார் ஸ்தலம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்தும் பாணந்துறை பொலிஸார் ஊடாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத ஸ்தலங்கள் மற்றும் மத விவகாரங்கள் தொடர்பில் அத்துமீறல்களை முன்னெடுப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அது  தொடர்பில் விசேட விசாரணைகளை  நடத்தவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41