டிஸ்னி நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஒன்று வெளியீட்டுக்கு முன்பாகவே ‘ஹேக்கர்’களால் திருடப்பட்டிருப்பதாகவும், அதை இணையத்தில் வெளியிடாமல் இருப்பதற்காக ஹேக்கர்கள் கப்பம் கோரியுள்ளதாகவும் டிஸ்னி நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் ஐகர் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்களின் கைவரிசையால் கடந்த வாரம், உலகின் சுமார் 100 நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தளங்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில்தான் பொப் ஐகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருடப்பட்ட படம் எது என்பது குறித்தோ, கப்பமாகக் கோரப்படும் பணம் எவ்வளவு என்பது குறித்தோ பொப் எதுவித தகவலையும் வெளியிடாத போதும், ஹேக்கர்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

என்றபோதும், இது ஒரு விளம்பர ஏற்பாடுதான் என்றும், வெளிவரப்போகும் திரைப்படத்தின் சந்தைப் பெறுமதியை உயர்த்துவதற்காகத்தான் இந்த அறிவித்தலை பொப் வெளியிட்டுள்ளார் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.