இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர்  விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆட்சியிலும், நிகழ்கால ஆட்சியிலும் இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு  மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். 

சர்வதேச வெசாக் வாரத்தை முன்னிட்டு இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று  இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். 

இதன் போது தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் கலந்துகொண்டிருந்தனர். இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். 

இந்த சந்திப்பு ஒரு திட்டமிடப்படாத அவசர சந்திப்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.  

அதேபோல் இந்த சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கலந்துகொண்டார். இந்த சந்திப்பு குறித்து ஜி.எல் பீரிஸ் குறிப்பிடுகையில், 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது  மிகவும் ஆரோக்கியமான வகையில்  இடம்பெற்றுள்ளது. எமது ஆட்சியில் இந்தியா எமக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கிய நட்புறவு நாடாகும். 

அதேபோல் இப்போதும் அவர்களது உறவு முறையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆகவே நாம் கடந்த காட்சியில் கையாண்ட நட்புறவை தக்கவைக்கும் வகையில் இந்த சந்திப்புகளை கோரியிருந்தோம். அதற்கமைய நேற்று பின்னிரவு எமக்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கடந்த காலத்தில் தமது ஆட்சியிலும் அதேபோல் நிகழ்கால ஆட்சியில் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சந்திப்பில் பிரதமர்  நரேந்திர மோடிக்கு  நன்றி தெரிவித்திருந்தார்.

  அதேபோல் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையிலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் தொடர்ந்தும் அமைய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்க்கத்தக்கது. முன்னைய ஆட்சியில் இந்தியாவின் நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மிகவும் நெருக்கடியான கால சூழலில் எமக்கு இந்த சந்திப்புகளை இந்திய தூதரகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. எனவே இந்த சந்திப்பு மிகவும் ஆரோக்கியமான வகையில் அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.