தேசிய அரசாங்கத்தின் முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் அங்கு உரை நிகழ்த்தும்போது தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினர் என்சிறீநேசன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த கால 30 வருட யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். எனவே, இந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் எந்தவித  வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன்,  சகோதர இனத்தைச் சேர்ந்த இணைத்தலைவர்களும் ஒன்றுபட்டு இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும்' என்றார்.

'இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வரும் நிதியை திருப்பி அனுப்பக்கூடாது. கடந்த வருடத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டாலும், சில அபிவிருத்தித் திட்டங்கள் பூரணப்படுத்தப்படாமல், அதற்குரிய நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் கடந்த வருடம் 2,500 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களில் முடிவடையாதவை தொடர்பிலும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

- ஜவ்பர்கான்