வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகத்தின் வாயில்களை மறித்து முற்றுகைப் போராட்டத்தினை ஆரம்பித்த வேலையற்ற பட்டதாரிகள், உறுப்பினர்களை மாகாண சபைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

கடந்த 72 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக நியமனம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். அந்த நிலையில், கடந்த நாட்களாக பல்வேறு தரப்பினர்களுடனும் தமது வேலைவாய்ப்பு குறித்து பல கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போதும், இதுவரையில் வேலைவாய்ப்புக் குறித்து எவரும் உறுதியான பதில் அளிக்கவில்லை. 

விரக்தியடைந்து இன்று  வடமாகாண சபையின் முன்பாக காலை ஒன்று கூடிய பட்டதாரிகள் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகத்தின் இரு வாயில்களை மூடி போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

போராட்டத்தின் போது, சபைக்கு வருகை தந்த முதலமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களை அவைக்கு செல்ல விடாது தடுத்த போது, முதலமைச்சர் பட்டதாரிகளுடன் கலந்துரையாடினார்.

நேற்று முன்தினம் ஜனாபதி மற்றும் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, வேலை வாய்ப்பு குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதனால், அந்த சந்திப்பின் பின்னர் இறுதியான முடிவுகளை தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் கருத்தினை ஏற்க மறுத்த பட்டதாரிகள் நடைபெறவுள்ள (மாகாண சபை அமர்வின் போது,) இன்றைய தினமே, தமக்கான இறுதியான முடிவினை தெரிவிக்குமாறு கேட்டு முதலமைச்சரை மாகாண சபைக்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்தினார்கள்.

முதலமைச்சர் அங்கிருந்து சென்றதும், பட்டதாரிகள் ஏனைய உறுப்பினர்களை உள்ளே செல்லவிடாது தடுத்ததுடன், தமது போராட்டத்தினை தொடர்ந்தும் மாகாண சபையின் முன்பாக முன்னெடுத்தனர்.