எம்முடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பாடசாலையில் புத்திசாலியாக படித்து முதலிடத்தில் சித்தியெய்துகிறார் என்றால் அவர்களின் சந்தோஷமே வேறு. ஆனால் அதற்கு மாற்றாக தம்முடைய பிள்ளைகளுக்கு கற்றல் குறைபாடு அதாவது டிஸ்லெக்சியா என்பதன் அறிகுறியிருந்தால் உடனே சோர்ந்து போய்விடுகின்றனர். ஆனால் பெற்றோர்கள் இது குறித்து கவலையடையத் தேவையில்லை. ஏனெனில் இதற்காகவே தற்போது தனியாக ஆசிரியர்கள் உருவாகிவிட்டனர். மருத்துவர்கள் மற்றும் இத்தகைய தனி ஆசிரியர்களின் கண்காணிப்பில் இந்த குறைபாட்டினை முழுமையாக களையமுடியும்.

டிஸ்லெக்சியா என்பது 3வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பெரும்பான்மையான ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு. அதாவது இவர்களின் இடது பக்க மூளையின் செயல்திறன் முழுமையாக இயங்குவதில்லை. இதனால் இவர்கள் வகுப்பறையில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும், கடினமான உழைப்பும் இருந்தால் இதனை முற்றாக களைய முடியும்.

உலகம் முழுவதும் 2 முதல் 7 சதவீத குழந்தைகள் அதிலும் அதிகமாக ஆண் குழந்தைகள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மரபியல் காரணங்கள் மற்றும் சுற்றுப்புற காரணங்களால் தான் இவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான ஆய்வுகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது traumatic dyslexia, primary dyslexia, secondary dyslexia என்று 3 வகையான டிஸ்லெக்சியா பாதிப்பினை கண்டறிந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு எழுத்துகள் கண்ணாடியில் தெரிவது போன்று தலைகீழாகத்தான் தெரியும் என்பார்கள். சமீபத்திய ஆய்வின் படி இவர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளைக் கற்பதைக் காட்டிலும் இத்தாலி, ஸ்பானீஷ் போன்ற மொழிகளை கற்கத் தொடங்கும் போது எளிதாக கற்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் தற்போது இவர்களுக்காகவே தனி பயிற்சி முறை கையேடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த மொழியில் கற்க அனுமதிப்பதும் ஒரு வகையான நிவாரணமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் 12 வயது வரைக்கும் மட்டும் தான். இவர்கள் காலப்போக்கில் இத்தகைய குறைபாட்டிலிருந்து மீண்டு விடுகிறார்கள். ஆனால் கற்கும் பருவத்தில் கற்றல் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது பெற்றோர்களின் கடமை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

Dr. லட்சுமி V.

தொகுப்பு அனுஷா.