பல வருடங்களாக பாலம் வெடிப்புற்று மற்றும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படாததால் அக்கரப்பத்தனை பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்றாசி நகரத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இப்பாலம் ஆபாத்தான நிலையில் உள்ளது.

டயகம, அக்கரப்பத்தனை மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் பிரதான வீதியிலேயே இப்பாலம் அமைந்துள்ளது.

100 வருடங்களுக்கு மேல் பலம் வாய்ந்த இப்பாலம் 2005ம் ஆண்டு மன்றாசி நகரத்திலிருந்து போடைஸ் வரைக்கும் காபட் பாதையாக செப்பனிடப்பட்டது.

பாதை செப்பனிட்ட போதிலும் இப்பாலத்தை புனரமைப்பதற்கு போதிய பணம் இல்லை என கைவிடப்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இப்பாலம் பாதுகாப்பு கம்பிகள் இல்லாமையினால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகுவதோடு, விபத்தில் சிக்கி பலர் பலத்த காயங்களுடன் அக்கரப்பத்தனை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்ட வேண்டி விடயமாகும்.

இப்பாலத்தை அமைப்பதற்கு போடப்பட்டிருந்த அடித்தளத்தில் பாரிய கற்கள் வெடிப்புற்று காணப்படுவதோடு, பாலம் அபாயகரமான நிலையில் இருக்கின்றது என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாலத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் இன்மையினால் இரவு நேரங்களில் பாதை எது? பாலம் எது? பள்ளம் எது? என்று தெரியாமல் அடிக்கடி முச்சக்கரவண்டிகள் இவ்விடத்தில் விபத்துக்குள்ளாகுவதோடு, சுமார் 18 மேற்பட்ட விபத்துகள் சம்பவித்துள்ளது.

இதேவேளை இப்பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் இப்பாலத்தின் ஊடாக நடந்து செல்வதால் பாரிய இடையூறுகளை இவர்கள் சந்திப்பதோடு வாகனங்கள் வரும் பொழுது பாலத்தை கடக்க முடியாத நிலையில் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இப்பாலத்தை புனரமைத்து தருமாறு மலையக அரசியல்வாதிகளிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் இப்பிரதேச மக்கள் கோரிய போதிலும் இவர்கள் எவரும் கவனத்திற்;கொள்வதில்லை என இப்பிரதேச மக்கள் அங்கலாகின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இப்பாலத்தை வெகுவிரைவில் புனரமைக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.